மகளிர் துப்பாக்கி சுடுதலில் சாதனை ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெண்கலம் வென்றார் மனு பாக்கர்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது. பரபரப்பான இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட மானு பாக்கர் (22 வயது) மொத்தம் 221.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார்.

இதே பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த தென் கொரிய வீராங்கனைகள் ஜின் யி ஓஹ் (243.2 புள்ளி) தங்கப் பதக்கமும், கிம் யெஜி (241.3) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மனு பாக்கர் வென்ற வெண்கலம் தான் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும். மேலும், ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிசுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அரியானா மாநிலம், ஜஜ்ஜார் நகரை சேர்ந்த மனு பாக்கருக்கு கிடைத்துள்ளது. ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம், ஏர் ரைபிள் பிரிவில் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெறும் கையுடன் திரும்பிய மனு பாக்கர், தனது 2வது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். வாழ்த்து மழை: பாரிசில் இந்திய அணியின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்துள்ள மனு பாக்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், பல துறைகளை சார்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சாதனை வீராங்கனைக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

The post மகளிர் துப்பாக்கி சுடுதலில் சாதனை ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெண்கலம் வென்றார் மனு பாக்கர் appeared first on Dinakaran.

Related Stories: