14வது அகில இந்திய ஹாக்கி தமிழ்நாடு – ம.பி. டிரா

சென்னை: அகில இந்திய ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு – மத்திய பிரதேசம் அணிகள் மோதிய சி பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. எழும்பூர் ஹாக்கி அரங்கில் நடந்து வரும் இத்தொடரில், மத்திய பிரதேசம் தனது முதல் லீக் ஆட்டத்தில் 29-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் நிக்கோபார் அணியையும், தமிழ்நாடு 7-0 என ஆந்திராவை வீழ்த்தின. அதே உற்சாகத்துடன் நேற்று 2வது லீக் ஆட்டத்தில் மோதின. இரு அணிகளுமே தற்காப்பு ஆட்டத்தில் உறுதியாக இருந்ததால், இடைவேளை வரை கோல் ஏதுமின்றி சமநிலை நீடித்தது. 2வது பாதி ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் மத்திய பிரதேச வீரர் லவ் குமார் கானொலியா பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து (35வது நிமிடம்) 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தார். 42வது நிமிடத்தில் அக்‌ஷய் துபே பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோலடிக்க, ம.பி. 2-0 என முன்னிலையை அதிகரித்தது.

இதையடுத்து, தாக்குதலை தீவிரப்படுத்திய தமிழ்நாடு அணிக்கு செல்வராஜ் கனகராஜ் பெனால்டி கார்னரில் கோல் போட்டு அசத்தினார். இதனால் புத்துணர்ச்சி பெற்ற தமிழ்நாடு அணிக்கு 53வது நிமிடத்தில் எஸ்.சண்முகவேல் அபாரமாக ஃபீல்டு கோல் போட்டார். அதன் பிறகு கோல் அடிக்க இரு அணி வீரர்களும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. தமிழ்நாடு அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை அந்தமான் நிக்கோபார் தீவுகளை எதிர்கொள்கிறது.

 

The post 14வது அகில இந்திய ஹாக்கி தமிழ்நாடு – ம.பி. டிரா appeared first on Dinakaran.

Related Stories: