கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் 15ம் தேதி தொடக்கம்: அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை.!

சென்னை: வரும் 15ம் தேதி தொடங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து, அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில், இதுவரை ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டது. மாதம் தோறும் உரிமைத் தொகை அவரவர் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும். எனவே பயனாளிகளுக்கு வங்கி கணக்கு அவசியம். வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். தற்போது தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறது. ரூபே கார்டாக வழங்கப்படும்.

திட்டம் தொடங்கப்பட்டு அதிகபட்சம் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் உரிமை தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான வரும் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், மகளிர் உரிமை திட்டம் தொடர்பான இறுதி கட்ட ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறைச் செயலாளர் தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம் பகவத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எத்தனை பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள், அவர்கள் விவரம் என்ன என்பது குறித்தும், தொடக்க விழா எப்படி நடத்த வேண்டும், நிராகரிக்கப்படும் பெண்களுக்கு மறுவாய்ப்பு வழங்குவது எப்படி என்பதும் குறித்தும், மாவட்ட அளவில் நடத்தப்படும் தொடக்க விழாக்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், வரக்கூடிய மாதங்களில் எந்த தேதியில் பணம் டெபாசிட் செய்வது உள்ளிட்டவைகள் குறித்த ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் 15ம் தேதி தொடக்கம்: அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை.! appeared first on Dinakaran.

Related Stories: