பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை ரூ.231 கோடி வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி : தூத்துக்குடி தாலுகா அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவு கடிதம் வழங்கும் விழா, தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 50 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்குவதற்கான ஆணையை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்னும், கூடுதலாக முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசியுள்ளோம். இதுதொடர்பாக முதல்வரிடம் கலந்துபேசி நல்ல முடிவு எடுப்பதாகவும், உறுதி அளித்துள்ளனர்.

குறிப்பாக, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், இரண்டு பெண் குழந்தைகள் இருப்பவர்கள், அவர்களின் 18வயது பூர்த்தி அடைந்து, முதிர்வு உதவித்தொகை பெறக்கூடியவர்கள், தங்களிடமுள்ள பாண்டு பேப்பரின் நகலை சமூக நலத்துறை அலுவலகத்தில் நேரில் சென்று கொடுத்து, முதிர்வு உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம். சிலர், வேறு மாநிலம், வேறு மாவட்டம் சென்றவர்கள், முகவரி மாறி இருப்பவர்கள் என அனைவரும் இரண்டுபெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய முதிர்வு உதவித்தொகையை அந்தந்த மாவட்டத்திலுள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் பாண்டு பேப்பரின் நகலை எடுத்து கொண்டு நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் சுமார் 10ஆயிரத்துக்கும் அதிகமானோர், இந்த திட்டத்தின்கீழ் பயன் பெறக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள். இத்திட்டத்திற்கென, மாநிலத்தில் இதுவரை ரூ.231 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார்.இதில் மாநகராட்சி தெற்கு மண்டலத்தலைவர் பாலகுருசாமி, தாசில்தார்கள் பிரபாகரன், ராஜலெட்சுமி, கவுன்சிலர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ரவீந்திரன், இளைஞரணி சிவக்குமார் என்ற செல்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை ரூ.231 கோடி வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் கீதாஜீவன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: