பே-டிஎம் ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து எப்போதும்போல் பணப் பரிவர்த்தனை செய்யலாம். பே-டிஎம் பேமண்ட் வங்கிக் கணக்கில் தற்போது உள்ள இருப்பை இந்த மாதம் 29ம் தேதி வரை பரிவர்த்தனை செய்ய முடியும். மார்ச் 1ம் தேதி முதல் புதிதாக டெபாசிட் செய்ய முடியாது.
நாடு முழுவதும் பெரும்பாலான வியாபாரிகள் பே-டிஎம் கியூ ஆர் கோடு மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து யுபிஐ முறையில் அனுப்பப்படும் பணத்தை பெற்றுக் கொள்கின்னர். பே-டிஎம் பேமண்ட் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே பணம் பெற முடியாது. பிற வங்கியுடன் இணைத்திருந்தால் தொடர்ந்து பணம் பெறுவதில் தடையில்லை. தற்போது பே-டிஎம் வாலட்டில் பணம் போட்டு வைத்திருப்பவர்கள், இருப்பு உள்ள வரை பரிவர்த்தனை செய்யலாம்; பில் தொகைகளை செலுத்தலாம். அல்லது இருப்பு தொகையை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். அடுத்த மாதம் முதல் வாலட்டில் பணத்தை போட முடியாது.
பே-டிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர், அதில் தற்போது உள்ள இருப்பு தொகை வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். புதிதாக டாப் அப் செய்ய முடியாது. அதன்பிறகு அவர்கள் பே-டிஎம் அல்லாத வேறு பாஸ்டாக் பெற்றுக் கொள்ளலாம். சிலர் பே-டிஎம் மூலம் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர். இவற்றை செபி நிர்வகித்து வருகிறது. ரிசர்வ் வங்கி நடவடிக்கையைத் தொடர்ந்து இதுதொடர்பாக செபி ஆராய்ந்து முடிவு எடுக்கலாம் என தெரிகிறது. ஆனால், அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில நிறுவனங்கள் பே-டிஎம் கேட்வே மூலம் பணப் பரிவர்த்தனை பெற அனுமதி அளிக்கின்றன. ஆனால், அவை பிற வங்கிகளுடனும் இணைந்து இந்தச் சேவையை பெறுவதால் அதில் பாதிப்பு இருக்காது எனக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், பே-டிஎம் கேட்வே மட்டும் பயன்படுத்துவோர் வேறு பேமண்ட் கேட்வே சேவைக்கு மாறிக் கொள்ள வேண்டும்.
The post பே-டிஎம் வங்கிக்கு விதித்த தடையால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு வருமா? appeared first on Dinakaran.