ஓவல்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 114 ரன்கள் எடுத்தது, பின்னர் களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறினர். தொடக்க வீரர் மெயர்ஸ் 2 ரன்களில் ஹர்திக் பந்தில் ஆட்டமிழந்தார். ஏத்தனைஸ் 22 ரன்களில் வெளியேற பிரான்டன் கிங் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய ஷிம்ரன் ஹெட்மயர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 88 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், குல்தீப் யாதவ், ஜடேஜா ஜோடி பந்துவீச்சில் கூட்டணி அமைத்து விக்கெட்டுகளை வேட்டையாடினர்.
23 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்னில் சுருண்டது. இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணிய 2வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். 2018-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் அந்த அணி 104 ரன்னில் சுருண்டதே மோசமான ஸ்கோராக நீடிக்கிறது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா 16 ரன்னுடனும், கேப்டன் ரோகித் ஷர்மா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 9வது வெற்றி இதவாகும். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், ஜடேஜாவும் இணைந்து 7 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு ஆட்டத்தில் 7 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும். 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
The post மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி appeared first on Dinakaran.