பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு, நேற்று மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் ஜூன் மாதம் முதல் வாரத்தில், முதல் போக நெல் சாகுபடிக்காக, ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் திறப்பு கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து அடுத்தக்கட்டமாக இரண்டாம் போக நெல் சாகுபடி மேற்கொள்ள ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு கடந்த ஜனவரி 10ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு அண்மையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பயிர்களை காக்க பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறையினர், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கான உத்தரவு வரபெற்ற நிலையில், நேற்று ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் உள்ள சிறுபுனல் வழியாக வினாடிக்கு 120 கன அடியாக வெளியேறிய தண்ணீரானது ஆற்று வழியாக பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு சென்றது. இந்த தண்ணீர் திறப்பானது, அடுத்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வரை குறிப்பிட்ட இடைவெளி விட்டு சுமார் 35 நாட்கள் தொடர்ந்திருக்கும்.
இதன் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட காரப்பட்டி, பள்ளி விலங்கன், பெரியணை, அரியாபுரம், வடக்கலூர் ஆகிய 5 வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.