இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரிக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் காலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகிறது. இயற்கையாகவே விவேகானந்தர் மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாக உள்ளது. இதனால் கடல்நீரோட்டம் திடீரென குறையும் காலங்களில் இங்கு படகுகளை இயக்க முடிவதில்லை. இதனால் விடுமுறை காலங்களில் அதிகளவில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிரமமாக உள்ளது.
விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே குறுகிய தூரம் மட்டுமே இருப்பதால் அவற்றை இணைத்து கண்ணாடி பாலம் அமைக்க கோரிக்கை எழுந்தது. இந்த திட்டத்தை அரசு பரிசீலனை செய்து கண்ணாடி பாலம் அமைப்பதற்காக ரூ.37 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை தமிழக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கூண்டுபோல் அமைக்கப்படும் இந்த கண்ணாடி பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது பாதையின் கீழே கடலின் அழகை ரசித்துக்கொண்டே செல்லும் வகையில் வெளிநாடுகளில் உள்ளதுபோல கண்ணாடியால் அமைக்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைகளின் மாதிரியை சேகரித்து சென்னை ஐஐடிக்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கண்ணாடிப்பாலம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் எ.வ.வேலு மே 24ம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது இங்கு வந்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலநிலை மற்றும் இதர சூழ்நிலைகளை பொறுத்து கண்ணாடி பாலம் கட்டுமான பணிகள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் திறக்கப்படும்போது கன்னியாகுமரிக்கு புதிய அடையாள சின்னம் கிடைப்பதோடு, இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.
The post விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே கடலுக்குள் கண்ணாடி பாலம் பிப்.14க்குள் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.