உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் குறித்து அமெரிக்க அதிபருடன் மோடி உரையாடல்

புதுடெல்லி: தனது உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் குறித்து அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் சென்று வந்த நிலையில், அவர் நேற்றிரவு வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் நிலைமை உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினேன். உக்ரைனில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு ஆதரவை இந்தியா அளிக்கும் என்று வலியுறுத்தினேன்.

வங்கதேசத்தில் நடந்த அரசியல் நிலைமை குறித்தும் விவாதித்தோம். மேலும் வங்கதேசத்தில் சிறுபான்மையினரின், குறிப்பாக இந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, இயல்புநிலையை மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஜோ பைடனுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி தனது சமீபத்திய உக்ரைன் பயணம் குறித்து விவாதித்தார். ‘குவாட்’ உட்பட பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையானது, இரு நாட்டு மக்களுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை செய்வதே நோக்கமாக உள்ளது என்பதை பிரதமர் மோடியும் அதிபர் பைடனும் அடிக்கோடிட்டு உரையாற்றினர்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் குறித்து அமெரிக்க அதிபருடன் மோடி உரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: