ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டம் விருதுநகரில் ஜவுளிப்பூங்கா ஒன்றிய அரசு ஒப்புதல்: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

சென்னை: விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் விருதுநகரில் அமைக்கப்பட உள்ள ஜவுளிப் பூங்காவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

அதன்படி விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில் பி.எம்.மித்ரா எனப்படும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க ஒன்றிய அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவுக்காக சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழில் முன்னேற்ற நிறுவனம் 1,052 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தியுள்ளன. மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்கும் பணியை சிப்காட் நிறுவனம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பூங்கா அமைப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சி வெற்றி அடைந்துள்ளது. 1,052 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் ஜவுளிப் பூங்கா மூலம் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் ஜவுளிப் பூங்கா மூலம் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளிப் பூங்காவுக்காக 13 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. 2026 செப்டம்பருக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். ஜவுளி பூங்காவில் பணியாற்றவுள்ள தொழிலாளர்களுக்காக 10,000 படுக்கைகள் வசதி கொண்ட விடுதி அமைக்கப்படும்.

இதற்காக அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் அதிகாரிகள் குழு, தமிழ்நாடு விருதுநகரில் ஜவுளி பூங்கா ரூ.1,894 கோடியில் அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப ஜவுளித் துறையில் உலகத் தலைவராக தமிழகத்தைப் பார்க்கும் எங்கள் கனவு விரைவில் நனவாகும். இந்த திட்டத்திற்கு விதைகளை விதைத்த அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மாநில நலன்களை பேணுவது குறித்த எங்கள் குறிப்பிட்ட கோரிக்கைகளை கவனமாகக் கேட்டு திட்டம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கும் நன்றி. தமிழ்நாடு ஏற்கனவே இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதியாளராக உள்ளது, இப்போது நாம் பெரியதாகவும் சிறப்பாகவும் வளர போகிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

* 13 லட்சம் சதுர அடி இடம்
* 1,052 ஏக்கரில் ஜவுளி பூங்கா
* 1 லட்சம் வேலைவாய்ப்பு
* 10,000 படுக்கைகள் கொண்ட பணியாளர் தங்குமிடம்
* நிறைவு: செப்டம்பர் 2026
* இலக்கு: ரூ.10,000 கோடி முதலீடு

The post ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டம் விருதுநகரில் ஜவுளிப்பூங்கா ஒன்றிய அரசு ஒப்புதல்: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: