×

விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்புறத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

*அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாகவும், சுற்றுப்புற பாதுகாப்பு தன்மை கொண்ட மாவட்டமாக மாறுவதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்று ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை சார்பில், தூய்மை இயக்கம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் தினந்தோறும் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பின் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மூன்று நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சி அலுவலகங்களில் இருந்த காகித குப்பைகள், பயன்பாடற்ற கண்ணாடி பொருட்கள், மின்னணுக்கழிவுகள், உடைந்த மரச்சாமான்கள், உபயோகமற்ற தளவாடப்பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து உரிய கணக்கில் வரவு வைக்கவும், இதுதொடர்பான அறிக்கையினை தூய்மை இயக்க இணையதளத்தில் உள்ளீடு செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தூய்மை இயக்கம் சார்பில் நமது மாவட்டத்தில் உள்ள கிராமம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மக்கும், மக்கா குப்பைகளை கண்டறிந்து மறு சுழற்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல், நெகிழிகளை தவிர்க்கும் விதமாக துறை சார்ந்த அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றுவதோடு, பொதுமக்களிடம் நெகிழிப்பைகள் பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல், மறு சுழற்சி செய்யும் குப்பைகளை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகர்பகுதிகளில் கட்டட கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டுவதை தவிர்த்து, அதற்கான பகுதிகளில் கழிவுகளை கொட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் நீர்நிலைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து பாதுகாப்பான முறையில் அகற்றுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

அனைத்துத்துறைகள் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழுப்புரம் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாகவும், சுற்றுப்புற பாதுகாப்பு தன்மை கொண்ட மாவட்டமாக மாறுவதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இதில் ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பத்மஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்புறத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Villupuram ,Collector ,Sheikh Abdul Rahman ,Villupuram District Collector's Office ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...