திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ளது. கடந்த வாரங்களில் தென்தமிழக கடற்கரையோரப்பகுதியில் ஆங்காங்கே மழை பெய்தது. அதன்பிறகு கடல் அலைகளில் சில நேரங்களில் சீற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடந்த சில தினங்களாக அரிப்பு காரணமாக சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு 3 அடி முதல் 6 அடி ஆழத்திற்கு மணல் அரித்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயில் நிர்வாகம் சார்பில் கடற்கரை முகப்பு பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
