- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- உதயநிதி
- அமித் ஷா
- வடக்கு மண்டல திமுக இளைஞர் மாநாடு
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- 2வது
- மாநாட்டில்
- சேலம்
- மக்களவைத் தேர்தல்
வடக்கு மண்டல திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் வெற்றிகரமாக நடத்தி காட்டினோம். அதன்பின்னர் நடந்த மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்தார்கள். இங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்க்கும்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதேபோன்ற வெற்றியை பெற்று தலைவருக்கு சமர்பிப்பீர்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இன்று பல கட்சிகள் உறுப்பினர்களை சேர்க்கவே கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் திமுக இளைஞரணியினர் ஒவ்வொரு பூத் வாரியாக சென்று நிர்வாகிகளை நியமித்துள்ளார்கள். அந்த வகையில் 91 சட்டமன்ற தொகுதிகளில் மாவட்ட, மாநகர, நகரம், பாகம் வரை அமைப்பாளர், துணை அமைப்பாளர் என 1 லட்சம் பேரை நியமித்து இந்த கூட்டத்திற்கு வரவழைத்துள்ளார்கள். இதற்காக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதேபோன்று அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி.
திருவண்ணாமலையில் மலை இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். ஆனால் மலை மட்டுமல்ல, கடலும் உள்ளது என்பதை போன்று இங்கு திரண்டிருக்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் சில கட்சிகளில் இளைஞர்களை திரட்டுவது பெரிய விஷயமாக உள்ளது. ஆனால் திமுகவில் மட்டும் தான் இளைஞரணியினரை அதிகளவில் மாநாடை போன்று திரள வைக்கிறோம். இந்தியாவில் எந்த இயக்கமும் செய்யாத சாதனையை செய்துள்ளோம்.
இது கணக்கு காட்ட கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. எதிரிகள் போடும் தப்பு கணக்கை சுக்குநுறாக்க போடப்படும் கொள்கை கூட்டம். பொதுவாக இளைஞர்களை அதிகம் கூட்டும்போது அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் தற்போது உள்ளது. குறிப்பாக காட்டாற்று வெள்ளம் போல் இருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாது என ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் திமுக இளைஞரணியினர் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டவர்கள். அதற்கு இந்த கூட்டமே சாட்சி. கட்டுப்பாடு இல்லாமல் ஒரு லட்சம் அல்ல, ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும் யாருக்கும் பலனில்லை. அதுபோன்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும் சாதிக்க முடியாது. ஆனால் உங்களை போன்று கட்டுப்பாடு நிறைந்த கூட்டம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஒரு பலம் என உறுதியாக சொல்ல முடியும். ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டவர்கள் திமுகவினர் அல்ல. சுயமரியாதைக்கு கட்டுப்பட்டவர்களாக திகழ்பவர்கள் திமுகவினர்.
இன்று சிலபேர் மிரட்டி பார்க்கிறார்கள். குறிப்பாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் பேசுகிறார். நமக்கெல்லாம் சவால் விடுகிறார். பீகாரில் வெற்றிபெற்றுவிட்டோம். எங்கள் இலக்கு அடுத்தது தமிழ்நாடு என்கிறார். நான் அமித்ஷாவுக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் சொல்கிறேன். எங்களை எவ்வளவு சீண்டினாலும் எங்கள் கருப்பு, சிவப்பு இளைஞர் படையினர் உங்களை களத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். நமது முதல்வர் சொன்னதுபோன்று நமது தமிழகம் டெல்லிக்கு எப்போதுமே அவுட்ஆப் கன்ட்ரோல்தான்.
அப்படிப்பட்ட நம்மை பார்த்து தயாராக இருங்கள், வருகிறோம் என அமித்ஷா மிரட்டுகிறார். ஆட்சி அதிகாரம், பதவி தக்க வைக்க உருவான கட்சி திமுக அல்ல. இது தமிழினத்தை காப்பாற்ற தோன்றிய இயக்கம். மிசா, மொழிப்போரில் வெற்றிபெற்ற இயக்கம். பல துரோகங்கள், அடக்குமுறைகளை வீழ்த்திய இயக்கம் திமுக. இப்படிப்பட்ட எங்களை பார்த்து குஜராத்தில் இருந்து மிரட்டப்பார்த்தால் கனவில் கூட அது நடக்காது. திமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.
பீகார், உ.பி. ம.பி. என வடமாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தமிழகத்தில் நுழைய தப்பு கணக்கு போடுகிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது. பாஜ என்பது மதம்பிடித்த யானை என நாம் கருதுகிறோம். அப்படிப்பட்ட யானையை அடக்கும் அங்குசம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இது மோடிக்கும் தெரியும், அமித்ஷாவுக்கும் தெரியும்.
அதனால்தான் நேராக வந்தால் எதிர்கொள்ள முடியாது என்பதற்காக புதுபுது அடிமைகளை அழைத்துக்கொண்டு நம்மை மோத பார்க்கிறார்கள். அதுமட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என தமிழகத்தை நுழைய பார்க்கிறார்கள். ஆனால் நாம் தமிழக மக்கள் மற்றும் திமுக தொண்டர்களை நம்பி களம் காண்கிறோம். எனவே பாசிச சக்திகளை வீழ்த்தி காக்கும் சக்தி திமுகவுக்கு உண்டு.
அமைதி பூங்காவான தமிழகத்தில் எதாவது குழப்பலாம் என திட்டம் போடுகிறார்கள். அது நடக்காது. வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். வானவில் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அது நிரந்தரம் அல்ல, உதயசூரியன் மட்டுமே நிரந்தரம். 7வது முறையாக திமுக ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
*‘இன்ஜின் இல்லாத கார் அதிமுக’
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், `சென்னையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அதிமுக கூட்டம் நடந்தது. அதில் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியை முதல்வராக்குவோம் என தீர்மானம் போட்டுள்ளார்கள். பொதுவாக காரில் பேட்டரி டவுன் ஆகிவிட்டால் அதனை 4 பேர் சேர்ந்து தள்ளி ஸ்டார்ட் செய்யலாம். ஆனால் இன்ஜினே இல்லாத காரை எப்படி ஸ்டார்ட் செய்ய முடியும்? இன்ஜின் இல்லாத காரை பாஜ கயிறு கட்டி இழுக்க பார்க்கிறது.
எடப்பாடி தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்கிறார். ஆனால் அவர் முதலில் அதிமுகவை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அவர்களது கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருக்கிறார்கள். அடிமையாக இருந்து வாழ்வதை விட சுயமரியாதையாக இருக்க எடப்பாடி முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* திமுக இளைஞரணியினர் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டவர்கள். அதற்கு இந்த கூட்டமே சாட்சி. கட்டுப்பாடு இல்லாமல் ஒரு லட்சம் அல்ல, ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும் யாருக்கும் பலனில்லை. அதுபோன்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும் சாதிக்க முடியாது.
