வேலூர்: வேலூர் மாநகராட்சி பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் நீண்ட நாட்களாக குவிக்கப்பட்டிருந்த குப்பை, கூளங்கள், செடிகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று அகற்றினர். வேலூர் மாநகராட்சி, அண்ணா சாலையில் பழைய மீன்மார்க்கெட் வளாகம் நடைபாதை வியாபாரிகளுக்காக 262 தரைக்கடைகளுடன் புனரமைக்கப்பட்டது. இவ்வளாகத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர், கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இங்குள்ள கடைகளுக்கு பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் ஏற்கனவே அதன் ஒருபுறம் உள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்திலும் கடைகளை கட்டி கூடுதலாக நடைபாதை வியாபாரிகளுக்காக ஒதுக்கினால் இங்கு பொதுமக்கள் எளிதில் வந்து செல்வார்கள்.
தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது என்று நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பிரச்னையால் தற்போது பழைய மீன்மார்க்கெட் வளாகத்தின் கடை பகுதிகள் சரக்குகள் வைக்கும் இடமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அத்துடன் இரவு நேரங்களில் திறந்தவெளி பாராகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடமாகவும் மாறியுள்ளது. இதனால் மாதக்கணக்கில் அங்கு காலி மதுபாட்டில்கள், குப்பைகள் குவிந்து செடிகள் வளர்ந்து சுகாதார சீர்கேட்டுடன் பழைய மீன்மார்க்கெட் வளாகம் காட்சி அளித்தது. இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார ஆய்வாளர் லூர்துசாமி தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மை பணியை மேற்கொண்டனர்.
The post வேலூர் அண்ணா சாலையில் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் குவிந்திருந்த குப்பை, செடிகள் அகற்றம் appeared first on Dinakaran.