பிரமோற்சவத்தின் 9வது நாளான நேற்று தீர்த்தவாரியில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பிரமோற்சவத்தின் 9வது நாளான நேற்று தீர்த்தவாரி உற்வசத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் கடந்த மே 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, நாள்தோறும் காலை, மாலை என இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை உற்சவம் ஜூன் 2ம் தேதியும், தேரோட்டம் ஜூன் 6ம் தேதியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  இதனை தொடர்ந்து, விழாவின் 9வது நாளான நேற்று கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதையொட்டி, கோயில் உள்புறம் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில், தேவி – பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து வரதராஜ பெருமாள் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாகச் சென்று அனந்தசரஸ் குளத்தில் இறங்கி தீர்த்தவாரி கண்டருளினார். அப்போது, அவருக்குப் படைத்த பிரசாதம் குளத்தில் வீசப்பட்டது. வரதராஜ பெருமாள் குளத்தில் நீராடியதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் இறங்கி புனித நீராடினர். இதனைத்தொடர்ந்து இன்று (ஜூன்9) மாலை கொடியிறக்கத்துடன் வைகாசி பிரமோற்சவம் நிறைவடைகிறது.

The post பிரமோற்சவத்தின் 9வது நாளான நேற்று தீர்த்தவாரியில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: