சென்னை: மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: 2023 டிசம்பர் 31க்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், சம்பளம் வழங்கப்படாது என்று ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அறிவித்திருக்கிறது. இதனால் நூறு நாள் வேலைத் திட்ட அட்டை பெற்றுள்ள 35 விழுக்காடு பேர் ஊதியம் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில், 28 விழுக்காட்டினர் பட்டியல் சமுதாயத்தினர்; 1.47 விழுக்காட்டினர் பழங்குடியினர். மொத்தம் 87 விழுக்காட்டினர் பெண்கள். இந்த ஊதியம்தான் லட்சக்கணக்கான குடும்பங்களின் பசியைப் போக்குகிறது. தமிழ்நாட்டில் 66.66 லட்சம் குடும்பங்கள் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்புப் பெறுகின்றன.
மோடி ஆட்சிக்கு வந்தபின், இத்திட்டத்தை நிறுத்தும் முயற்சியாக, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது. 2023-24 பட்ஜெட்டில் வெறும் ரூ.60 ஆயிரம் கோடியை மட்டுமே பாஜ அரசு ஒதுக்கியது. இது எதிர்பார்ப்பை விட 33%குறைவாகும். தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 696 கோடியே 77 லட்சத்தை வழங்காமல் ஒன்றிய அரசு அலைக்கழித்து வருகிறது. இந்நிலையில் ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் மாகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கம் முழுமையாகச் சீர்குலைந்து விடும். இத்திட்டத்தை படிப்படியாக சிதைத்து வரும் ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்கு உரியது. ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற உத்தரவைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மதிமுக பொதுசெயலாளர் வைகோ கண்டனம் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதார் இணைப்பு கட்டாயமா? appeared first on Dinakaran.