யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி ஏ.எஸ்.ஜீ ஜீ-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி ஏ.எஸ்.ஜீ ஜீ-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வில் தேசிய அளவில் 933 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் முதலிடத்தை சென்னையை சேர்ந்த ஜீ ஜீ என்ற பட்டதாரி பெண் பிடித்துள்ளார்.

நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 26 விதமான உயர் பதவிகளில் உள்ள 1,011 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2022 பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு 2022 ஜூன் 5-ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் அதே மாதம் 22-ம் தேதி வெளியானது. அதில் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு செப்டம்பர் 16 முதல்25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 6-ல் வெளியிடப்பட்டது. இதில் வெற்றிபெற்ற 2,529 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

அவற்றில் 933 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாட்டை பொருத்தமட்டில் மொத்தம் 42 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ என்ற மாணவி மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 107-வது இடத்தையும் பிடித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் கூறியதாவது;

நேற்று வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவில் கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ அவர்கள் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பீர்!. இவ்வாறு தெரிவித்தார்.

The post யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி ஏ.எஸ்.ஜீ ஜீ-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: