பல்கலை. துணைவேந்தர்களுடன் உயர்கல்வி செயலர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை உயர்கல்வித் துறை தீவிரம் காட்டி வந்த நிலையில், அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்தந்த கல்வி நிறுவனங்கள் விருப்பத்திற்கேற்ப பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர்கல்வித் துறை நேற்று திடீர் ஆலோசனையை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார்.

இதில் உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி, பொது செயலாளர் கிருஷ்ணசாமி உள்பட அதிகாரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல், சட்டம், மருத்துவம், வேளாண்மை, பொறியியல் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 25 துணைவேந்தர்கள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை சார்ந்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துணைவேந்தர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை இந்த கூட்டத்தில் முன்வைத்திருக்கின்றனர்.

குறிப்பாக மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்வுகளை சரியான நேரத்தில் நடத்தி, குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுவது, அதற்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்கல்வி வளர்ச்சி தொடர்பாகவும், கல்வி நிறுவனங்களின் உள் கட்டமைப்பு வசதி தொடர்பாகவும் ஒவ்வொரு பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் விரிவாக விசாரிக்கப்பட்டதாகவும், ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் உயர்கல்வித் துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post பல்கலை. துணைவேந்தர்களுடன் உயர்கல்வி செயலர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: