×

ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்..!!

டெல்லி: ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு அண்மையில் அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றக் கூட்டத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனிடையே மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பல்வேறு மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து இது தொடர்பாக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைத்திருந்தார். அண்மையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்பாக கூட இதுகுறித்து காங்கிரஸ் எதுவும் சொல்லவில்லை என்ற வருத்தத்தையும் கெஜ்ரிவால் முன்வைத்திருந்தார்.

அதன்பிறகு காங்கிரஸ் அவசர சட்டம் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிச்சயம் குரல் எழுப்புவோம் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லி அரசு தொடுத்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

The post ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi Govt ,Delhi ,Delhi Government ,Union Government ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பரபரப்பு ரூ.5,620 கோடி...