சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒன்றிய குழு நாளை சென்னை வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த 7-ம் தேதி சென்னை வந்த ஒன்றிய பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங்,பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர், தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வெள்ள சேதங்களைச் சீரமைக்க இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை தெரிவித்த முதல்வர், நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, மாநில பேரிடர் நிதியாக ரூ.450 கோடியை தமிழகத்துக்கு வழங்க பிரதமர் உத்தரவிட்டார். இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி மத்திய குழுவுக்கு தலைமை வகிப்பார். வெள்ளம் பாதித்த பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு ஒன்றிய குழு ஆய்வு செய்ய உள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் பாதிப்பு பகுதிகளை ஒன்றிய குழு நாளை மறுநாள் ஆய்வு செய்கிறது. 2 நாள் ஆய்விற்கு பிறகு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஒன்றிய குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். ஆய்வு விவரங்களின் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து ஒன்றிய குழு உள்துறை அமைச்சகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஒன்றிய குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதி வழங்கப்படும்.
The post மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறது ஒன்றிய குழு appeared first on Dinakaran.