‘டுவிட்டரி’ன் முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரி!

என்னதான் பெண்கள் பல துறையில் சாதித்தாலும் இன்னும் கால் தடம் பதிக்காத எத்தனையோ துறைகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அதெல்லாம் ஒவ்வொன்றாக மாறி அத்தனை துறைகளிலும் பெண்கள் கால்தடம் பதிக்க வேண்டிய நாட்கள் வரத் துவங்கிவிட்டன. அப்படி இன்றளவும் பெண் ஒருவரின் தலைமை பொறுப்பை வாசம் செய்யாத இடமாக இருந்தது டுவிட்டர் தலைமைச்செயல் அதிகாரியின் நாற்காலி. இதோ அதுவும் நடந்துவிட்டது. சமீப நாட்களில் ‘கூகுளி’ல் அதிகமாக தேடப்பட்ட ஒரு பெயர், லிண்டா யாக்கரினோ. காரணம், கடந்த மே 12ம் தேதியன்று ‘டுவிட்டரி’ன் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக லிண்டாவை நியமித்தார் அதன் நிறுவனரான எலன் மஸ்க். அமெரிக்க ஊடகத்துறையில் முக்கியஆளுமையாக வலம்வருபவர் இவர்.நவீன விளம்பரத்தில் பல மாற்றங்களைச் செய்தவர். மட்டுமல்ல; ‘டுவிட்டரி’ன் முதல் பெண் தலைமைச் செயல்அதிகாரியும் இவரே. அதனால் இணையவாசிகளின் மத்தியில் லிண்டாவைப் பற்றிய ஆர்வம் அதிகமானது. அவர்கள் லிண்டாவைக் குறித்த விவரங்களைத் தேடிப்பிடித்து, பட்டியலிட்டு வருகின்றனர்.

யார் இந்த லிண்டா யாக்கரினோ?

இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெற்றோர்களுக்குப் பிறந்தவர் லிண்டா யாக்கரினோ. நியூயார்க்கில் உள்ள டீர் பார்க்கில் பள்ளிப் படிப்பையும், பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் டெலி கம்யூனிகேஷன் துறையில் இளங்கலை படிப்பையும் முடித்தார். பள்ளிக் காலத்திலிருந்தே விளம்பரத்துறையின் மீது தீராத காதலுடன் இருந்தார்.விளம்பரத்தில் புதுமைகளைப் புகுத்துவதுதான் அவரது லட்சியம். லிண்டாவின் கிரியேட்டிவ் திறமையைப் பார்த்த புகழ்பெற்ற மல்டிமீடியா நிறுவனமான ‘டர்னர் என்டர்டெயின்மென்ட்’, விளம்பரம் மற்றும் விற்பனைத்துறையில்வேலைக்குச் சேர்த்துக்கொண்டது.இந்நிறுவனத்தில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக வேலை செய்தவர், எக்சிகியூட்டிவ் வைஸ் பிரசிடன்ட் மற்றும் சீஃப் ஆபரேட்டிங் ஆபீசர் போன்ற உயர்பதவிகளை வகித்தார். ‘டர்னரி’ல் லிண்டா இருந்தபோது அதன் விளம்பரம் மற்றும் சந்தைப்பிரிவில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.அவரது உத்திகளை இன்றும் தொடர்கிறது ‘டர்னர்’. அடுத்து உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான ‘என்பிசியுனிவர்சலி’ல் விளம்பர விற்பனைத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கல்லூரிக் காலத்தில் ‘என்பிசி’யில்தான் விளம்பரம் குறித்த பயிற்சிகளை எடுத்திருக்கிறார் லிண்டா. இந்நிறுவனத்தில் ‘பீகாக்’ எனும் ஓடிடி தளத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிப்பதும் லிண்டாதான். இதுபோக அமெரிக்காவின் லாப நோக்கமற்ற அமைப்பான விளம்பரக் கவுன்சிலின் சேர்மனும் இவரே.கடந்த மே 12, 2023ல் ‘என்பிசி யுனிவர்சலி’ல் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் லிண்டா. அன்றே தனது டுவிட்டர் பக்கத்தில் லிண்டாவைக் குறித்து அறிமுகப்படுத்தினார் எலன் மஸ்க். மட்டுமல்ல; இதற்கு முன்பு டுவிட்டரின் தலைமைச் செயல்அதிகாரிகளாக இருந்தவர்கள் எல்லோருமே தொழில்நுட்பத்தைப் பின்புலமாகக் கொண்டவர்கள்.

தொழில்நுட்பம் சாராத முதல் தலைமைச் செயல் அதிகாரி லிண்டா என்பதால் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய இணைய உலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. லிண்டாவுக்குத் திருமணமாகி மகனும், மகளும் இருக்கின்றனர். இப்போது நியூயார்க்கில் வசித்துவருகிறார். இன்னும் சில நாட்களில் டுவிட்டரைத் தன்வசமாக்கப் போகும் லிண்டாவின் சொத்து மதிப்பு 250 கோடி ரூபாய். அவரது வயது 59.
– த.சக்திவேல்

 

The post ‘டுவிட்டரி’ன் முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரி! appeared first on Dinakaran.

Related Stories: