×

இயல்பு நிலை திரும்புகிறது; தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்: தூத்துக்குடியில் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

தூத்துக்குடியில் வெள்ளம் வடிந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு தொழிலாளர்கள்.

* பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு
* துறைமுகத்தில் பல கோடிக்கு துணிகள் நாசம்

தூத்துக்குடி: வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தூத்துக்குடி தெருக்களில் 10 நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளது. படிப்படியாக இயல்பு நிலை திரும்பினாலும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பலியானானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. துறைமுகத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் தண்ணீரில் நனைந்து நாசமடைந்துள்ளன. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளங்கள், ஆறுகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வெள்ள சேத பாதிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் அறிவித்தார். மேலும் ஒன்றிய குழுவினரும் நெல்லை, தூத்துக்குடியில் ஆய்வு செய்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சாலை, மின்விநியோகம், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பி விட்ட நிலையில் தூத்துக்குடியில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. சில இடங்களில் முழுமையாக வெள்ளம் இன்னும் வடியாததால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

30க்கும் மேற்பட்ட பகுதிகளில் 10 நாட்களாகியும் தண்ணீர் வடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தண்ணீரில் பாம்பு, நட்டுவாக்காலி உள்ளிட்ட விஷப்பூச்சிகள் கிடப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வெள்ளநீரை வடிய வைக்க வேண்டும், நிவாரண உதவி வழங்க வேண்டும் என சில இடங்களில் போராட்டம் நடந்தது. அதே நேரத்தில் நிவாரண உதவிகளை பெற இடுப்பளவு தண்ணீரில் நீந்தி வந்தே பொருட்களை பெற்று செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. 10 நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்ச்சல், வயிற்றுபோக்கால் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடியாததால் வேலைக்கோ, வியாபாரத்திற்கோ செல்ல முடியவில்லை. சிலர் தினமும் வேலைக்கு சென்றால் தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நிலையில் உள்ளோர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளத்திற்கு பலியான 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வருவாய் துறையின் கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் 4883 வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் இடிந்துள்ளன. இதில் முழுமையாக இடிந்த வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும், பகுதியாக இடிந்த வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. 63 ஆயிரத்து 790 கோழிகளும், 11 ஆயிரத்து 294 ஆடுகளும், 1609 மாடுகளும், 526 கன்றுக்குட்டிகளும், 16 எருமைகளும், 18 பன்றிகளும், 32 கழுதைகளும் உயிரிழந்துள்ளன. கழுதைகளுக்கும், பன்றிகளுக்கும் தவிர மற்ற உயிரினங்களுக்கு அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. கழுதைகளுக்கும், பன்றிகள் உயிரிழப்பிற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சலவையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூரில் ரெடிமேட் ஆடைகள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இந்த ஆடைகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ரெடிமேட் ஆடைகள், தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள கன்டெய்னர் கிடங்கில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. வெள்ளப்பெருக்கால் கன்டெய்னர் கிடங்குகளில் தண்ணீர் புகுந்தது. அங்கு சுமார் 5 அடி உயரத்திற்கு தேங்கிய தண்ணீர் தற்போது 2 அடியாக குறைந்துள்ளது. ஆனால் முழுமையாக வடியாததால் கோடிக்கணக்கான மதிப்பிலான ரெடிமேட் ஆடைகள் நாசம் அடைந்துள்ளன. இதனால் ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

The post இயல்பு நிலை திரும்புகிறது; தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்: தூத்துக்குடியில் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tuticorin ,Dinakaran ,
× RELATED இருசக்கர வாகனங்களில் தனியாக...