திருவண்ணாமலை தலத்துக்கு சென்று ஈசனை மனதார வழிபட்டு பாவம் போக்கிக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அளவிட இயலாது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோரும் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது.
செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி உரிய ஆகம விதிகளை கடைபிடித்து வழிபட்டால் பிறவிப் பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நமது மூதாதையர்கள் கட்டிய ஆலயங்களில் இன்றும் அருள் அதிர்வலைகள் நிரம்பி இருப்பதை உணரலாம்.
கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் சக்தியை முழுமையாக பெறுவதற்கு ஏற்ப நமது பழமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. எனவே ஒரு ஆலயம் எந்த ராசி அல்லது எந்த நட்சத்திரத்தின் அம்சத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு வழிபட்டால் அதற்குரிய பலன்களை நிச்சயமாக பெற முடியும்.
அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் கிருத்திகை நட்சத்திரத்தின் அம்சத்தில் அமைந்து இருப்பதாக கருதப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரத்துக்குரிய கிரகம் சூரியன் ஆவார்.
சூரியனின் அதிதேவதை சிவபெருமான் ஆவார். எனவே கிருத்திகை நட்சத்திரம் தினத்தன்று அண்ணாமலையாரை வழிபட்டால் அனைத்து வகை செல்வங்களையும் பெற முடியும் என்று சொல்கிறார்கள். கிருத்திகை நட்சத்திரத்துக்குரிய தெய்வம் முருகன். ஜோதிட சாஸ்திரப்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம் ஆவார். திருவண்ணாமலை ஆலயத்தில் அண்ணாமலையாருக்கு எந்த அளவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகிறதோ, அதே அளவுக்கு முருகப்பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டே திருவண்ணாமலை ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்வதை சிறப்பானதாக கருதுகிறார்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமையன்று வழிபாடு செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
The post செவ்வாய் கிழமை விரதமும்… அண்ணாமலையார் வழிபாடும்….!! appeared first on Dinakaran.