தாம்பரம் அருகே திருநங்கை வெட்டிக்கொலை: கால்வாயில் சடலம் வீச்சு

சென்னை: தாம்பரம் அருகே திருநங்கை சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  தாம்பரம் அடுத்த புதூர், மப்பேடு பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சஞ்சனா (28). இவர், தெருக்கூத்து, நாடகங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினரான திருநங்கை தீனதயாளனை (50), நேற்று முன்தினம் இரவு செல்போனில் தொடர்பு கொண்ட சஞ்சனா, கூடுவாஞ்சேரியில் நடைபெறும் தெருக்கூத்துக்கு செல்ல வேண்டும், என்னுடன் வா, என அழைத்துள்ளார்.

ஆனால், தீனதயாளன் வர மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், நேற்று காலை சஞ்சனா, தீனதயாளனை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே, தீனதயாளனின் அண்ணன் முத்துப்பாண்டி, சஞ்சனாவை தொடர்பு கொண்டு, தீனதயாளன் வீட்டுக்கு வரவில்லை, என கூறியதால் சஞ்சனா அவரை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது, மாம்பாக்கம் பிரதான சாலையில், கோவிலாஞ்சேரி பகுதியில் தீனதயாளனின் இருசக்கர வாகனம் கிடந்துள்ளது.

அருகில் சுற்றிப் பார்த்தபோது, அங்கிருந்த கால்வாய் நீரில் பலத்த வெட்டு காயங்களுடன் தீனதயாளன் சடலம் கிடந்தது. இதுகுறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட தீனதயாளன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாம்பரம் அருகே திருநங்கை வெட்டிக்கொலை: கால்வாயில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: