வாலாஜா : வாலாஜா நகராட்சியை தூய்மை நகரமாக மாற்றிட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஆணையாளர் இளையராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
வாலாஜா நகராட்சியில் 786 வர்த்தக நிறுவனங்களும், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
இதன்மூலம் நகராட்சியில் தினமும் 11.56 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாக்கப்படுகிறது. இவற்றில் 6 டன் ஈரக்கழிவுகள், 5.5 டன் உலர் கழிவுகள். இதில் ஈரக்கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அனைத்து வீடுகளில் இருந்தும் சேகரித்து, அதனை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரித்து உரமாக மாற்றுகின்றனர்.
அதேபோல் உலர் கழிவுகளான பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்பு, மின்சாதன பொருட்கள், பெயிண்ட் டப்பாக்கள் போன்றவை மறுசுழற்சிக்கு விற்பனை செய்யப்படுகிறது. எதற்கும் பயன்படாத குப்பைகள் மாதம் ஒருமுறை சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளாக அனுப்பப்படுகிறது. மீதம் உள்ள கழிவுகளே நகராட்சிக்கு சொந்தமான உரக்கடங்கில் வைக்கப்படுகிறது.
காய்கறிகள் மற்றும் பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், தூய்மை பணியாளர்களிடம் கொடுக்காமல் தெருக்களில் வீசப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பைகள் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பிளாஸ்டிக் பைகளை தின்னும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. சிலர் பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல், மஞ்சள் பை, துணி பைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த முன்வரவேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல், சுகாதார நலன் ஆகியவை பேணிகாக்க முடியும்.
இதன் மூலம் வாலாஜாவை தூய்மை நகரமாக விரைவில் மாற்றிட முடியும். நகராட்சி எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வாலாஜாவை தூய்மை நகரமாக மாற்றிட பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.
