செங்குன்றம் அருகே உடைந்த மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: செங்குன்றம் அருகே உடைந்த மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் மின்சார வாரிய எல்லைக்குட்பட்ட புழல், காந்தி பிரதான சாலை புழல் 23வது வார்டு உள்ளது. இங்கு, மாநகராட்சி அலுவலகம் மற்றும் குழந்தைகள் அங்கன்வாடி மையம் எதிரே மின்சார ட்ரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் கம்பங்களில் உள்ள சிமெண்ட் கொட்டி வெறும் எலும்பு கூடு போல் காட்சி அளிக்கிறது. இதேபோல், காந்தி 2வது தெரு மற்றும் காவாங்கரை, கன்னடபாளையம், சக்திவேல் நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், வெஜிடேரியநகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் பல இடங்களில் மின்சார கம்பத்தில் உள்ள சிமெண்ட்கள் கொட்டி எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது.

எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்துகளை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக வெஜிடேரிய நகர் 2வது தெருவில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் வளைந்து உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இது குறித்து பலமுறை கிராண்ட் லைன் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே பெரு விபத்துக்கள் நடக்காமல் இருக்க உடனடியாக மின்சார வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்து போன மின்சார கம்பங்களை உடனடியாக அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பகுதி மக்கள் சார்பில் கிரான்ட் லைன் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என புழல் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எச்சரித்து உள்ளனர்.

The post செங்குன்றம் அருகே உடைந்த மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: