95 பணியிடத்துக்கு 1.91 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: மெயின் தேர்வு ஆக. 10ல் தொடங்கும் என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் 26, 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட 95 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 22, 414 பேர் விண்ணப்பித்திருந்தனர். முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்தது. மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் 1 லட்சத்து 90 ஆயிரத்து 518 பேர் மட்டுமே எழுதினர். இந்நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, மார்ச் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டது. அந்த மாதத்திலும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி, குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான www.tnpsc.gov.in வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பணியிடத்துக்கு 20 பேர் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2,162 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளம் மூலம் மே 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கர் குமார் வெளியிட்ட அறிவிப்பில், “குரூப் 1 முதல்நிலை தேர்வில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 450க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அடுத்தகட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் வழங்கப்படும்” என்றார்.

The post 95 பணியிடத்துக்கு 1.91 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: மெயின் தேர்வு ஆக. 10ல் தொடங்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: