திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுக்கத் தவறிய 5 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிரமான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி முதல் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 250க்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். 4450 லிட்டர் எரி சாராயமும், 4000 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும், 5800 லிட்டர் கள்ளசாராயமும் கண்டுபிடிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய காவலர்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கண்ணமங்கலம் எஸ்.எஸ்.ஐ. அருள்நாதன், சேத்துபட்டு காவல் நிலைய காவலர் ஹரிஹர ராஜநாராயணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல், தானிப்பாடி காவல் நிலைய காவலர் பாபு மற்றும் உர்ஜின் நிர்மல், செங்கம் காவல் நிலைய காவலர் சோலை ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய புகாரில் 5 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
The post தி.மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனையை தடுக்கத் தவறிய 5 காவலர்கள் சஸ்பெண்ட்: மாவட்ட எஸ்.பி. அதிரடி appeared first on Dinakaran.