திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை..!!

திருப்பூர்: திருப்பூரில் பாஜக அராஜகம் செய்து வருவதற்கு தேர்தல் ஆணையம் காவல்துறை நடவடிக்கை எடுக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள, ஆற்றுப்பாளையத்தில் பாஜகவினர் ஒரு பெண்ணை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். பாஜக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தவர்களிடம், “நாப்கினுக்கு கூட ஜிஎஸ்டி வரி போட்டு இருக்கீங்களே நியாயமா” என்று பல பெண்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

உடனே, அங்கு ரெடிமேட் கடை வைத்திருந்த சங்கீதா என்ற பெண்ணின் கடை மற்றும் வீட்டுக்குள் நுழைந்து பாஜகவினர் தரக்குறைவான அசிங்கமான வார்த்தைகளில் அவரைத் திட்டி, தாக்கியுள்ளனர். இந்த நிகழ்வை வீடியோ எடுத்தவரையும் தாக்கி அவரது செல்போனைப் பறித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை, சங்கீதா பெயர் சொல்லி அழைப்பது வீடியோ காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. இது குறித்து அவர் காவல்துறையில் புகார் செய்துள்ளார். காவல்துறை உடனடியாக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தோல்வி பயத்துக்கு உள்ளான பாரதிய ஜனதா, தமிழகத்தின் பல பகுதிகளில் கலவர, பதட்டச் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. தமது வாக்குகளை பதிவு செய்ய வர முடியாத அளவுக்கு பொதுமக்களை பாஜக அச்சுறுத்துகிறது. இந்த அராஜக முயற்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையம் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: