திருப்பதி கோயிலில் அக்டோபர் மாதம் ரூ.108 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக ₹108 கோடி கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப அங்குள்ள உண்டியலில் நகை, பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இவை தினமும் கணக்கிடப்பட்டு கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது. ஏழுமலையான் கோயிலில் தரிசன பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உண்டியல் காணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒரு மாத உண்டியல் காணிக்கை சுமார் ₹100 கோடிக்கு மேல் கிடைத்து வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் ₹108 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 20வது மாதமாக ₹100 கோடிக்கு மேல் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோயிலில் நேற்று 63,710 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21,205 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் ₹3.13 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 5 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி கோயிலில் அக்டோபர் மாதம் ரூ.108 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: