திருப்பதி மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவமனைகளில் விழிப்புணர்வு கூட்டம்

 

*அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி உத்தரவு

திருமலை : திருப்பதியில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்ய மாவட்ட நிர்வாகம், தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி தர்மா உத்தரவிட்டுள்ளார். திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அதிகாரி தர்மா நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தர்மா பேசியதாவது: திருப்பதியில் உள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் மருத்துவமனை உரிமையாளர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையில் 2 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளது.

மேலும் 3 சிறுமிகள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். திருப்பதி மருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து இதயங்களை சேகரிக்க முடிந்தால், எதிர்காலத்தில் அதிகமான குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். எனவே திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அளிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேவஸ்தானத்தின் கீழ் உள்ள சுவிம்ஸ், பர்ட், அஸ்வினி மற்றும் சென்ட்ரல் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தேவஸ்தானத்தில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களில் 40 நிரந்தர பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மருத்துவர் என ஒதுக்கீடு செய்து குடும்ப மருத்துவர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

து தொடர்பான அனைத்து தரவுகளையும் தயார் செய்து, மருத்துவர்களை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இதயம் சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்கு தேவைப்பட்டால் ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்த தகுந்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். சிறு குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ நிபுணர்கள் நியமனம் மற்றும் உபகரணங்கள் வாங்குவது இப்போதிருந்தே தொடங்கப்பட வேண்டும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பர்ட் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது. எனவே இதற்காக பிரத்யேகமாக இணையதளம் தயார் செய்ய வேண்டும். இந்த மருத்துவமனையில் குறைந்த விலையில் சி.டி. ஸ்கேன், ஆஞ்சியோ உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் குறைந்த விலைக்கு எடுப்பதால் பொது மக்களும் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். செயற்கை உறுப்புகள் தயாரிப்பு மையத்தை நவீனப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்வி ஆயுர்வேதா மருத்துவமனையில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேவையான அளவு சிசி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

பஞ்சகர்மா சிகிச்சை பெரிய அளவில் பிரபலமடைந்து வருவதால், இத்துறைக்கு தேவையான பணியாளர்களை நியமிக்க உத்தரவிட்டார். இதில் இணை செயல் அதிகாரி சதா பார்கவி, நிதி அலுவலர் பாலாஜி, பத்மாவதி குழந்தைகள் இருதய சிகிச்சை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஸ்ரீநாத், பர்ட் சிறப்பு மருத்துவர் ரெட்டப்பா, தலைமை மருத்துவ அதிகாரி நர்மதா, ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவமனைகளில் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: