திருவாரூர்: திருவாரூர், காரைக்குடி டெமு ரயில் நாளை முதல் மீண்டும் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என்ற தென்னக ரயில்வேயின் அறிவிப்பிற்கு ரயில் உபயோகிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையானது அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் பணி துவங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் 2019ம் ஆண்டில் பணி முடிவுற்று அதே ஆண்டு ஜுன் மாதம் 1ம் தேதி முதல் டெமு ரயில் சேவையாக 3 மாத காலத்திற்கு தொடங்கப்பட்டது. பின்னர் 3 மாத முடிவின் போது தினகரன் செய்தி எதிரொலி காரணமாக இந்த ரயில் சேவை என்பது நீட்டிக்கப்பட்டு தற்போது வரையில் இயங்கி வருகிறது.
மேலும் திருவாரூரிலிருந்து 152 கி.மீ தூரம் கொண்ட காரைக்குடியை கடப்பதற்கு கேட் கீப்பர்கள் இல்லாமல் மொபைல் கேட் கீப்பர்கள் கொண்டு இயக்கப்பட்டதால் பயண நேரம் என்பது 6 மணி நேரம் வரையில் ஆனதால் இந்த ரயில் சேவை என்பது பொது மக்களிடையே வரவேற்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் இதனை காரணம் காட்டி ரூ. 1000 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்ட இந்த வழித்தடத்திற்கு மூடுவிழா காணும் முயற்சியும் நடைபெற்ற நிலையில் அதுகுறித்து தினகரன் செய்தி மற்றும் நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ், ரயில் உபயோகிப்பாளர் சங்கம் உட்பட பலரது முயற்சி காரணமாக இந்த வழித்தடம் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த டெமு வாரத்தில் சனிகிழமை தவிர 6 நாட்கள் இயங்கி வந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து சென்னை-, திருவாரூர்-, பட்டுக்கோட்டை,- காரைக்குடி தடத்தில் ராமேஸ்வரம் வரையிலான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் மற்றும் எர்ணாகுளத்திலிருந்து காரைக்குடி மற்றும் திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி சிறப்பு ரயில் மற்றும் பிரதமர் மோடி மூலம் துவக்கி வைக்கப்பட்ட தாம்பரம், செங்கோட்டை சிறப்பு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கம் காரணமாக இந்த டெமு ரயில் சேவை என்பது வாரத்தில் செவ்வாய் முதல் வெள்ளி வரையில் 4 நாட்களுக்கு மட்டும் என சேவை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழிதடத்தில் தற்போது கேட் கீப்பர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் முழு அளவில் பணி அமர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக நாளை (1ம் தேதி) முதல் மீண்டும் இந்த டெமு ரயில் சேவையானது ஞாயிறு தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் இதற்கு தெற்கு திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், முதுநிலை இயக்குதல் மேலாளர் ஹரிகுமார், மற்றும் வணிக மேலாளர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
The post நாளை முதல் மீண்டும் வாரத்தில் 6 நாள் திருவாரூர், காரைக்குடி டெமு ரயில் இயக்கம்: ரயில் உபயோகிப்பாளர் சங்கம் நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.