*குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்
ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் ேநற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் தொடங்கிய மழை அதிகாலை வரை பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை விடியவிடிய பெய்தது. இதனால், நிர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி, உபரி நீர் வரத்து அதிகரித்து ஏரிகள் நிரம்பி வழிகிறது. இதனால், பல்வேறு கிராமங்களில் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தும், வயர்கள் அறுந்து விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இரவு முதல் அதிகாலை வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர். மேலும், 5 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் ஆரணி பகுதியில் உள்ள நாகநதி, செய்யாற்றுப்படுக்கை மற்றும் கமண்டலநாகநதி, ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால், நிர்நிலைகளில் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், ஆரணி டவுன் விஏகே நகர், ஜெயலட்சுமி நகர், தேனருவிநகர், கே.கே.நகர், பெரியார் நகர், மற்றும் ஆரணி அடுத்த இரும்பேடு ஹரிகரன் நகர், முள்ளிப்பட்டு இந்திராநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய், பக்ககால்வாய்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்து வீட்டுமனைகளாகவும், கடைகள், வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் தண்ணீர் வெளியேர வழியில்லாததால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி வருகிறது. இதில், நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. மேலும், குடியிருப்புகளில் தண்ணீர் வடியாததால், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மோட்டார்கள் மூலமும், பக்கெட்கள், பாத்திரங்கள் மூலம் எடுத்து ஊற்றி மழைநீரை வெளியேற்றனர். இதனால், பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்ல கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதில், சிலபகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து சூழ்ந்துள்ளதால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு மற்றும் பகல், இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் வீட்டிற்குள் செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். அதனால், குடியிருப்புகளில் புகுந்துள்ள மழைநீரை வெளியேற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆரணி அடுத்த சங்கீதவாடி ஊராட்சிக்குட்பட்ட அப்பந்தாங்கல் எம்ஜிஆர் நகர் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கிருந்த தண்ணீரை ஜேசிபி மூலம் கால்வாய்தூர்வாரி மழைநீர் அகற்றப்பட்டது.
ஆரணியில் 85.40 மிமீ மழை
திருவாண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பெய்த மழையின் அளவு, திருவண்ணாமலை 1.00 மி.மீ, போளூர் 28.80 மி.மீ, ஆரணி 85.40 மிமீ, ஜமுனாமரத்தூர் 14.00 மிமீ, தண்டராம்பட்டு 7.00 மி.மீ, செய்யாறு 25.00 மிமீ, வந்தவாசி 14.00, வெம்பாக்கம் 70.00 மிமீ, சேத்துபட்டு 6.40 மிமீ என மாவட்டம் முழுவதும் மழையின் அளவு 251.80 மிமீ பதிவாகி இருந்தது. இதில், அதிகபட்சமாக ஆரணியில் 85.40 மி மீட்டர் மழை பாதிவாகியது.
இடிந்து விழுந்த மேற்கூரை
ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் ஆரணி அடுத்த அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வரும் ராதா, கலைவாணன், அண்ணாமலை, பிச்சை, ராஜகோபால் மூர்த்தி ஆகிய 5 கூலி தொழிலாளிகளின் வீட்டின் மேற்கூரை தொடர்மழையால் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இந்த 5 குடும்பத்தினரும் நேற்று கூலி வேலைக்கு சென்றதால் உயிர் சேதங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை appeared first on Dinakaran.