×

தண்டையார்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை

தண்டையார்பேட்டை, நவ.3: தண்டையார்பேட்டையில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செல்வி (56). இவருக்கு கணவர் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். செல்வி, தீபாவளி சீட்டு மற்றும் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்துள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீட்டு போட்டவர்கள் பணம் மற்றும் பொருட்களை கேட்டு, செல்வி வீட்டின் முன்பு குவிந்தனர்.

அப்போது, பணம் மற்றும் பொருட்களை விரைவில் தருவதாக செல்வி கூறியுள்ளார். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், செல்வி திடீரென மாயமானார். சீட்டு பணம் செலுத்தியவர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டு, யாரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்.கே.நகர் காவல்நிலையத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு, தப்பிய செல்வியை கைது செய்து எங்களது பணத்தை வாங்கி தரவேண்டும் என போலீசாரிடம் கூறினர். அவரை தேடி வந்த நிலையில், வாடகை வீட்டை காலி செய்து பொருட்களை எடுக்கும்போது அந்த பகுதி மக்கள் செல்வியின் மகனை மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது, ‘உன்னுடைய தாய் இங்கு வந்தால்தான் உன்னை விடுவோம்’ என போலீசார் கூறியுள்ளனர். உடனே செல்போனில் தொடர்பு கொண்டு தாயிடம் பேசியதையடுத்து அவர் காவல்நிலையம் வந்துள்ளார். அப்போது பாதிக்கப்பட்டவர் செல்வியை தாக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் விசாரித்தபோது, தீபாவளி சீட்டு மற்றும் ஏலச் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை தனது பிள்ளைகளுக்கு கொடுத்ததும், இதில் ஒருவர் கார் வாங்கியதும், மற்றொருவர் வீடு கட்டி வருகிறார் என்பதும் தெரிந்தது. இதுபோல் தாம்பரம் பகுதியிலும் செல்வி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தண்டையார்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Dandiyarpetta ,Dandiyarpettai ,Dandaiyarpettai ,Karunanidhi Nagar 2nd Street ,
× RELATED இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக...