திருவள்ளூரில் இருந்து சென்னைக்கும் அரக்கோணத்துக்கும் செல்லும் ரயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 10 மணி வரையிலும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல 200க்கும் மேற்பட்ட ரயில்வே ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் ரயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
இந்தநிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலைய முகப்பு பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆட்டோக்கள் எதுவும் ரயில் நிலையம் அருகில் வரக்கூடாது என்பதற்காக காவல் துறை சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட தடுப்புகள் தற்போது ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் நடந்து செல்பவர்கள், பைக்கில் வருகின்றவர்கள் அவசரத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ரயில்வே ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர், சீரமைப்பு பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஓரமாக நிறுத்தி ஆட்டோவை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ரயிவ்வே நிர்வாகமும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையும் இணைந்து ரயில்நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் போக்குவர்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சாலையில் உள்ள தடுப்புகளால் தினமும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் கடும் தவிப்பு appeared first on Dinakaran.