1080 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பாடகி!

‘‘நமக்குத் தெரியாமலே நம்மைச் சுற்றி சாதனையாளர்கள் எத்தனையோ பேர் வலம் வருகின்றனர். அந்த வகையில் 100 ஆண்டு காலத் தமிழ் – கன்னட திரையிசைப் பற்றி, அற்புதமாக ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வென்றிருக்கிறார் ஆர். பிரியதர்ஷினி. யாருமே மேற்கொள்ளாத அரிய முயற்சி. இவர் ஒரு பின்னணிப் பாடகியும் கூட. கர்நாடக சங்கீதம், ஆன்மிகப் பாடல்கள் என கானமழையைப் பொழிய விடுகிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட பல்வேறு முகங்கள் இவருக்கு. பிறந்த சென்னைக்கும், வளர்த்த சிங்கப்பூருக்கும் மாறிமாறி பறபறவென விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறது இந்த கானக்குயில்.

உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?

நான் பிறந்தது சென்னையில்தான். தந்தை ராம். தனியார் நிறுவனம் ஒன்றின் ரசாயனப் பொறியாளர், அம்மா சுமதி. கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிஇ மற்றும் இசை ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். எழுத்து ஆர்வமும் இணைய எழுத்தாளராகவும் இருக்கிறேன்.

இசையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

மூன்றரை வயதிலேயே ராகங்களை அடையாளம் காணும் திறனைப் பெற்றிருந்தேன். என்னுடைய அம்மா, பாட்டி (தந்தையின் தாயார்) இருவரும் பாடுவார்கள். அப்பாவிற்கும் இசை மீது மிகவும் ஆர்வம் உண்டு. எனது ஆர்வம், திறமையைப் பார்த்து எனது தந்தை, தாத்தா பாட்டி என்னை இசை வகுப்புகளுக்கு அழைத்து செல்வார். சென்னை கலாஷேத்ராவில் என்னுடைய பள்ளிப் படிப்புத் தொடங்கியது.சிறு வயதிலேயே அப்பாவின் வேலை மாற்றத்தினால் வெளிநாடு சென்றுவிட்டேன். நான் வளர்ந்ததெல்லாம் தோகா, கத்தார் மற்றும் சிங்கப்பூரில் தான். பிறகு எனது இசை ஆர்வத்தினால் இந்தியாவிற்கு திரும்பியுள்ளேன். எனது பெற்றோர் என் இசையார்வம் கண்டு மிகவும் ஊக்குவித்தார்கள். இல்லையென்றால் நான் அங்கிருந்து இங்கு வந்து இசைப்பணிகளைத் தொடர்ந்திருக்க முடியாது.

சிங்கப்பூரில் யிஷுன் தொடக்க கல்லூரியில் படிக்கும் போது, எனது இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. சிங்கப்பூர் ரேடியோ ஒலி 96.8ன் பாட்டுத்திறன் போட்டியில் மேல்நிலைப் பிரிவில் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றேன். அதில் பல திரையிசை சார்ந்த பிரபலங் களின் அறிமுகம் கிடைத்தது. இதுவே பின்னணிப் பாடகியாகும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது.தமிழில் பிரபல பாடகர் ஹரிஹரனுடனான எனது முதல் பாடலை சிங்கப்பூரிலிருந்து வந்து பாடினேன். மறுநாள் எனக்குத் தேர்வுகள் இருந்தன. விமானத்தில் படித்துக்கொண்டே வந்து பாடிச் சென்றேன்.

திரைப்படங்களில் பாடிய பாடல் அனுபவத்தைப் பற்றி கூறுங்களேன்?

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் பிறமொழிகளில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடியுள்ளேன். பரத்வாஜின் இசையமைப்பில் ‘காதல் டாட் காம்’ என்ற திரைப்படத்தில்தான் முதன்முறையாக, ‘காதல் காதல்’ என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானேன். தொடர்ந்து இமான் இசையமைப்பில் ‘குஸ்தி’ படத்திற்காக ‘மசாலா மகாராணி’ என்ற பாடல், பெப்பி பாடலைப் பாடினேன். தொடர்ந்து அக்சய் குமார் நடித்த ‘கரம் மசாலா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் பாட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் ‘சிம்ஹ பலுடு’, ‘அஜ்ஜு என பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளேன்.

பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், மனோ, னிவாஸ், மதுபாலகிருஷ்ணன், கேகே, கார்த்திக் மற்றும் பலருடன் பல டூயட்களையும் திரைப் படங்களில் பாடியுள்ளேன்.

டாக்டர் பட்டம் எதற்காகக் கிடைத்தது?

நான் மைசூர் பல்கலைக்கழகத்தில் 100 வருட தமிழ் மற்றும் கன்னடம் திரைப்பட இசை குறித்து, டாக்டர் சி.ஏ.தராவின் வழிகாட்டுதலின் கீழ் 1080 பக்க ஆய்வறிக்கையுடன் Ph.D ஆராய்ச்சி செய்தேன். இதுபோன்ற ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த, இந்தியாவின் முதல் திரைப்படப் பின்னணிப் பாடகி நான்தான் என்பதில் பெருமை.100 ஆண்டுகால தமிழ்த் திரைப்பட இசை, மௌன காலங்களில் இருந்து விடுபட்டு, ஒலியில் ஆரம்பித்த காலங்கள் தொடங்கி, வரலாற்றுத் தொடர்பு, இசை அம்சங்கள், நுணுக்கங்கள், பாடல்கள், பின்னணி இசை, இசைப்பதிவு, இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள், ஒலி தொழில்நுட்ப வல்லுநர்கள், இசை உருவாக்கம், இசைத் தயாரிப்பு மற்றும் இசை வணிகம் பற்றிய தகவல்களை ஆராய்ந்து அதை எனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். இந்தியத் திரைப்பட இசைக்கான முதல் ஆதார நூல் இதுவாகும்.

திரையிசை தாண்டி இசையில் வேறு ஏதாவது பாடியிருக்கிறீர்களா?

திரைப்படப் பின்னணிப் பாடல்களைத் தவிர, பக்தி, இந்திய பாரம்பரிய இசை ஆல்பங்கள், ஜிங்கிள்ஸ், சீரியல்/ஷோ தலைப்புப் பாடல்கள், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், மராத்தி, உருது ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறேன். ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, துளு, ராஜஸ்தானி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பல மொழிகளிலும் பாடியிருக்கிறேன். தனியார், பக்தி ஆல்பங்கள் மற்றும் ஜிங்கிள்ஸ் ஆகியவற்றிற்காக 800க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளேன். பல ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன். பிற இசை இயக்குனர்கள் மற்றும் பல ரிகார்ட் லேபிள்களுக்காகப் பாடகியாகப் பணிபுரிந்துள்ளேன். நான் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 300க்கும் மேற்பட்ட நேரடி இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளேன்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில், நீங்கள் பாடிய புதிய ராகம் பற்றி கூறுங்களேன்?

ஒரு திரைப்படப் பின்னணி பாடகியாக இருந்துகொண்டு கர்நாடக தனி சங்கீத கச்சேரியும் செய்வதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். இசையமைப்பாளர் மஹேஷ் மஹதேவ், தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘தியாகராஜா’ என்கிற புதிய ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தைப் பாடும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.ஒலிப்பதிவு செய்யும்போது எனக்குள் ஒரு விதமான மகிழ்ச்சியும், நேர்மறை அதிர்வுகளும் ஏற்பட்டன. இது ஒரு புதிய ராகம் என்பதால் எனக்கு வேறு குறிப்பு இல்லை. நான் பாடிய கிருதியே இந்த ராகத்தின் முதல் இசை வடிவமாகும். இசையமைப்பாளர் மஹேஷ் மஹதேவின் வழிகாட்டல் மற்றும் உந்துதலினாலும் பாடல் ஒலிப்பதிவு மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் நடந்தது. பல வித்வான்கள், மூத்த இசைக்கலைஞர்கள் மற்றும் இசையியலாளர்கள் இந்த ராகத்தையும் புதிய படைப்பையும் பாராட்டினர்.

கர்நாடக இசை, திரையிசை – ஒரு பாடகராக நீங்கள் உணரும் சிரமம் என்ன?

கர்நாடக இசை பாரம்பரியமான ஒன்று, திரையிசை கதை அடிப்படையிலானது. எனக்கு எல்லா சங்கீதத்திலும் ஈடுபாடு உண்டு, எல்லா சங்கீதமும் ஒன்றே. கர்நாடக சங்கீதத்திற்குக் குரல் கொஞ்சம் ஒபனாக பாடவேண்டும், திரையிசைக்கு மேன்மை மற்றும் மேல் ஸ்தாயி குரலில் பாடவேண்டும். பல வகையில் நம் குரலை வித்தியாசப் படுத்தி பாடவும் தெரிந்திருக்க வேண்டும். பாடல்களின் சிச்சுவேஷன் அடிப்படையில் நாம் அதைப் பயன்படுத்த வேண்டும்.

கர்நாடக இசையின் வளர்ச்சிக்கு உங்கள் பங்கு என்னவாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?

கர்நாடக இசை இன்னும் பல புதிய பரிமாணங்களை பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறேன். பல புதிய ராகங்கள், கிருதிகள் நடைமுறைக்கு வரவேண்டும். பல புதிய அரிய ராகங்களைப் பாடவேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நம் பழைய கிருதிகளைக் கொண்டு செல்லவேண்டும். நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காத்து முழுமையான கர்நாடக சங்கீதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

பல தடைகளைத் தாண்டி சாதிக்கும் பெண்கள்பற்றி உங்கள் கருத்து?

பொதுவாக ஒன்றில் சாதனை செய்யவேண்டும் என்றால் அதற்குப் பல தடைகள் வந்துகொண்டே இருக்கும். நாம் மனம் தளராமல், கடுமையாக உழைத்தால், எதையும் சாதிக்க முடியும். என்ன கஷ்டம் வந்தாலும் நம்முடைய குறிக்கோளை விடாமல் செயல்படுத்த வேண்டும். அந்த மாதிரி செயல் படும் பெண்கள் நம் நாட்டின் பொக்கிஷம்.

  • அறிவு

கல்வியிலும் கலக்கல்

பிரியதர்ஷினி சிங்கப்பூரில் தனது பள்ளி உயர் கல்வியை முடித்துள்ளார். சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் இளங்கலை பட்டம். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பாரம்பரிய இசையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மேற்கத்திய இசையை லண்டனில் உள்ள ராயல் ஸ்கூல் ஆஃப் மியூசிக்கில் முடித்து ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற்றுள்ளார்.

The post 1080 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பாடகி! appeared first on Dinakaran.

Related Stories: