மாநகராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்ற பின், பஸ் நிலையத்தை நவீனப்படுத்தும் வகையில் தற்போது ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. குறிப்பாக பஸ் நிலைய பிளாட்பார தரை தளங்களில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு, கிரானைட் இருக்கைகளும் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் மேலும் பஸ் நிலையத்தின் மேற்கூரையில் தண்ணீர் கசிவு இல்லாத வகையில் தரைகற்கள் பதிக்கப்பட்டு நீர் கசிவு பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் 50க்கும் மேற்பட்ட பேன்கள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது 2 வது மற்றும் 3 பிளாட்பாரங்களில் பணிகள் நடக்கின்றன.
ஏற்கனவே முதல் மற்றும் 4 வது பிளாட்பாரத்தில் பணிகள் முடிவடைந்துள்ளன. பல லட்சம் செலவில் பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக செய்யப்பட்ட இருக்கை வசதிகள் தற்போது போதை ஆசாமிகளின் படுக்கையாக மாறி உள்ளது. காலையில் இருந்து இரவு வரை குடிமகன்கள் பலர், போதையில் இருக்கைகளை ஆக்கிரமித்து படுத்து கொள்கிறார்கள். இதனால் பயணிகள் இருக்கையில் அமர முடிவதில்லை. ஆண்கள் சிலர் நிர்வாண நிலையிலும் கிடப்பதால், பெண் பயணிகள் பிளாட்பாரத்தில் நிற்பதற்கே அச்சப்படுகிறார்கள்.
இது தவிர மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களும் பஸ் நிலைய பிளாட்பாரங்களில் மூட்டை, முடிச்சுகளுடன் தங்கி உள்ளனர். இவர்களில் சிலர், தாங்கள் அமர்ந்துள்ள இடத்தில் அருகிலேயே இயற்கை உபாதைகளையும் கழிக்கிறார்கள். இதனால் பயணிகள் முகம் சுழிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பாசி மணிகள், வளையல்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்பவர்களும் பிளாட்பாரத்தை தான் பயன்படுத்துகிறார்கள். இவர்களை இங்கு வியாபாரம் செய்ய கூடாது. பிளாட்பாரத்தில் தஞ்சம் அடைய கூடாது என மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்ைக செய்துள்ளது.
ஆனாலும் தொடரும் இந்த நிலையில் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பஸ்சுக்காக நிற்பதற்கு கூட முடியாமல் இளம்பெண்கள், பெண்கள் தவிக்கும் நிலை உள்ளது. இது மட்டுமின்றி திருட்டு கும்பல்களும் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்துள்ளனர். இவர்களில் பலர் குடிபோதையில் கிடக்கும் நபர்களிடம் இருந்து செல்போன்கள், மணி பர்சுகளை பறித்து செல்கிறார்கள். மேலும் பெண்களிடமும் நகைகள், பணம் பறிப்பு நடக்கிறது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம் என தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுத்தாலும் பஸ் நிலைய தூய்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாகவே உள்ளது. எனவே பயணிகள் இடையூறு இல்லாமல் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறது. எனவே மாற்று வழிகளை கையாண்டு, பயணிகள் பிரச்சினையின்றி பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
The post போதை ஆசாமிகள், திருட்டு பேர்வழிகளால் வடசேரி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை: பல லட்சம் செலவழித்தும் பலன் இல்லாத நிலை appeared first on Dinakaran.