கலைஞர் எழுதிய நூல்கள் நாட்டுடைமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பபாசி நன்றி

சென்னை: கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பபாசி அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) வெளியிட்ட அறிக்கை: முத்தமிழறிஞர் கலைஞரின் நூல்களில், சங்க இலக்கியம், இலக்கியம், உலகப் பொதுமறை நூலான திருக்குறள், சரித்திர நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் அரசியல் உள்ளிட்ட எண்ணற்ற படைப்புகளை படைத்துள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்கள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் கலைஞருடைய படைப்புகள் அனைத்தையும் பரிவுத் தொகையின்றி நாட்டுடமையாக்கி இருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அவருக்கு பபாசியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கலைஞர் தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்ததோடு அத்தொகையை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து அதிலிருந்து வரும் நிதியில் ஆண்டுதோறும் தலா 1 லட்சம் வீதம் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளை பபாசி வழியாக வழங்கப்பட்டு
வருகிறது.

உலகளவில் வாசிக்கப்படும் மாக்சீம் கார்க்கியின் தாய் நாவலை காப்பிய வடிவில் தந்தவர் கலைஞர். அதுமட்டுமின்றி தன் வரலாறாக நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பிலான 6 பாகங்கள், இப்போதும் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களிடையே வரவேற்பை பெற்ற ஆக்கம் என்பதில் மாற்றுச் சிந்தனை கொண்டவர்களும் மறுக்க முடியாத உண்மை. உடன் பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள் வழி உலக அரசியலையும் சமூக நீதியையும் முன் வைத்தவர் கலைஞர்.

பராசக்தி திரைப்படம் தொடங்கி பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதையும் சேர்த்து அவருடைய எழுத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிய தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post கலைஞர் எழுதிய நூல்கள் நாட்டுடைமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பபாசி நன்றி appeared first on Dinakaran.

Related Stories: