பரபரப்பான கடைசி நாளில் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல்; கைவசம் 7 விக்கெட்… இன்னும் 280 ரன் தேவை: புதிய சாதனை படைக்குமா இந்தியா?

லண்டன்:இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2வது டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டிராவிஸ் ஹெட் 163, ஸ்மித் 121 ரன் விளாச முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ரகானே 89, ஷர்துல் தாக்குர் 51 ரன் அடித்தனர். பின்னர் 173 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் (105 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் (57 பந்து, 7 பவுண்டரி), லபுஸ்சேன் 41 ரன்னில் (126 பந்து, 4 பவுண்டரி) , கேமரூன் கிரீன் 25 இந்திய பவுலிங்கில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 444 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கில் 18 ரன்னில் (19 பந்து, 2 பவுண்டரி) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 43 ரன்னில் (60 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) நாதன் லயனின் சுழலில் எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் புஜாரா (27 ரன், 47 பந்து, 5 பவுண்டரி) கம்மின்ஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். நேற்றைய ஆட்டம் முடிவில் இந்தியா 40 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி 44, ரகானே 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 5வது மற்றும் கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 280 ரன் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது. இதனால் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்றைய கடைசி நாளில் இந்தியா இலக்கை எட்டி புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்பபு எழுந்துள்ளது.

100% வெற்றி பெறுவோம்; முகமது ஷமி நம்பிக்கை: நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அளித்த பேட்டி: இன்று (ஞாயிற்றுக்கிழமை) போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நூறு சதவீதம் அனைவரும் நம்புகிறார்கள். நாங்கள் எப்போதும் போராடுகிறோம், உலகம் முழுவதும் சிறப்பாக செயல்படுகிறோம். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைவோம் என்று நாங்கள் நம்புகிறோம். சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் என்ன நடந்தது என்பது முக்கியமில்லை, நாங்கள் இங்கே விளையாடுகிறோம். கடைசி நாள் பற்றி சிந்திக்க வேண்டும், போட்டியில் வெற்றி பெறுவோம். டெஸ்ட் போட்டி ஐந்தாம் நாள் வரையிலும், கடைசி அமர்வு வரையிலும் தொடர வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதுதான் உண்மையான சோதனை. எனவே நாங்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும், அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நன்றாக பந்து வீச வேண்டும். நன்றாக பேட்டிங் செய்தால் 280 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் இல்லை,என்றார்.

நாங்கள் பிளாக்பஸ்டர் முடிவை பெறுவோம்: ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கூறியதாவது: நாங்கள் போர்டில் போதுமான ரன்களை வைத்திருப்பதாக நான் நினைக்கிறேன், எப்போதும் அதிக விக்கெட்டுகளை தேடுவோம், ரகானே மற்றும் கோஹ்லி நன்றாக ஆடினர். நாளை (இன்று) எங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. கில்லை அவுட் ஆகிய கிரீன் கேட்சால், நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். சரியான முடிவு எடுக்கப்பட்டது. ஸ்டார்க் அழகாக விளையாடினார், சரியான தருணத்தில் தாக்கி, அழுத்தத்தை குறைத்தார் என்று நினைத்தேன். இந்தியாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த டெஸ்ட் முழுவதும் அவர்களின் ரன் ரேட் 4க்கு மேல் இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு மோசமானதாக இல்லை. சரியான லென்த்தில் பந்துவீசி 7 விக்கெட்டையும் வீழ்த்தி நாங்கள் பிளாக்பஸ்டர் முடிவை பெறுவோம், என்றார்.

The post பரபரப்பான கடைசி நாளில் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல்; கைவசம் 7 விக்கெட்… இன்னும் 280 ரன் தேவை: புதிய சாதனை படைக்குமா இந்தியா? appeared first on Dinakaran.

Related Stories: