ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் வட்டார கல்வி அலுவலர் பணியிட தேர்வு முடிவு விரைவில் வெளியீடு

சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 2019-20 மற்றும் 2021-22ம் ஆண்டில் காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு 42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகத்தில் 131 மையங்களில் நேற்று நடைபெற்றது.

காலையில் தமிழ் தகுதித் தாள் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி, பிற்பகலில் பொதுப் பாடத்துக்கான தேர்வு 150 கொள்குறி வகை கொண்ட வினாக்களுடன் நடந்தது. இதில், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, புவியியல் என பட்டப்படிப்பு தரத்தில் 110 வினாக்களும், பொது அறிவு பிரிவில் 10 வினாக்களும், கல்வி முறை சார்ந்த 30 வினாக்களும் இடம்பெற்றிருந்தன.

150 மதிப்பெண்ணில் தகுதி மதிப்பெண்ணாக எஸ்.டி. பிரிவினர் 60ம், எஸ்.சி. பிரிவினருக்கு 67.5ம், இதர பிரிவினர்களுக்கு 75 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும். இந்த தேர்வை 35 ஆயிரத்து 400 பேர் எழுதியுள்ளனர். இதன்படி, ஒரு இடத்துக்கு கிட்டதட்ட 1,070 பேர் போட்டியிடுகின்றனர். இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவை விரைந்து வெளியிடுவதற்கு ஏதுவாக ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது.

The post ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் வட்டார கல்வி அலுவலர் பணியிட தேர்வு முடிவு விரைவில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: