குறைதீர்நாளில் மாணவர்களுடன் மனு கொடுக்க வந்த கவுன்சிலரை ‘லெப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய தஞ்சை கலெக்டர்

*சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

தஞ்சாவூர் : குறைதீர்நாளில் மாணவர்களுடன் மனு கொடுக்க வந்த கவுன்சிலரை ‘லெப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய கலெக்டர், உங்கள் மீது வழக்கு பதியப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.

அப்போது தங்கள் பகுதிக்கு பஸ் வசதி கோரி வடுகன் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகளை சீருடையுடன் மனு கொடுக்க வந்தனர். இதை பார்த்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கடும் கோபத்துடன், மாணவர்களின் படிப்பை கெடுக்கும் விதத்தில் மனு கொடுக்க அழைத்து வருவது சரியானது அல்ல. முதலில் அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லுங்கள். பின்னர் வந்து மனு கொடுங்கள் என்று ‘லெப்ட் அண்ட் ரைட்’ வாங்கினார். இதுபோல் மீண்டும் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். கலெக்டரின் இந்த அதிரடி முகம் கண்டு மனு கொடுக்க வந்தவர்கள் மாணவர்களுடன் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

இந்த சம்பவம் முடிந்த அடுத்த சில நிமிடத்தில் தஞ்சாவூர் மேல வெளிதோட்டம் 2வது வார்டை சேர்ந்த கவுன்சிலர் ஐயப்பன் தலைமையிலான வந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகளை சீருடையுடன் அழைத்து வந்து மனு கொடுத்தனர். மீண்டும் மாணவர்களுடன் மற்றொரு தரப்பினர் வந்ததால் மீண்டும் டென்ஷனான கலெக்டர், சரமாரியாக அவர்களிடம் கேள்விகள் எழுப்பினார்.

அப்போது அவர், நீங்கள் இதுவரை எனது அறையில் நேராக வந்து புகார் மனு அளித்துள்ளீர்களா?. அவ்வாறு மனு தராமல் இதுபோன்று பள்ளி மாணவர்களை அழைத்து வந்து மனு கொடுத்தால் என்ன அர்த்தம். நீங்கள் கவுன்சிலர் தானே. ஏன் இப்படி செய்கிறீர்கள். நேரடியாக வந்து மனு கொடுத்து பேசி இருக்கலாமே. நீங்கள் செய்வது சரியா. நீங்கள் படிக்கும் மாணவர்களை அழைத்து வந்துள்ளீர்கள். என் பேச்சுக்கு மரியாதை இருந்தால் நான் செய்கிறேன். இல்லையென்றால் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். உங்கள் கஷ்டத்தை நீங்கள் சொல்ல வந்து நான் அதை கேட்காமல் வெளியே அனுப்பினால் நீங்கள் கோபப்படுவதில் நியாயம். இதுவரை நீங்கள் இங்கு வரவில்லை.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பள்ளியிலிருந்து சீருடையுடன் அழைத்து வருகிறீர்கள். இதற்கு நான் நடவடிக்கை எடுக்கட்டுமா இல்ல வேண்டாமா? நீங்களே கூறுங்கள். அடுத்த முறை பள்ளி மாணவர்களை யார் அழைத்து வருகிர்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். உங்கள் பிரச்சனை தீர வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை தவிர வழக்குப்பதிவு செய்யப்படுவது நோக்கமாக இருக்க கூடாது. நீங்கள் கவுன்சிலர் என்பதால் ஏடி பஞ்சாயத்து மூலம் உங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். உங்கள் பகுதியில் சாலை நான் போட்டு தருகிறேன். குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்லுங்கள்.

கவுன்சிலர் பற்றிய தகவலை அங்கு உள்ள அதிகாரியிடம் கொடுக்க சொல்லி அவருக்கு நோட்டீஸ் அனுப்புங்கள் என அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
பள்ளி மாணவ, மாணவிகள் வந்தால் மனு மீது கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என நினைத்தார்களோ என்னவோ இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வந்த நிலையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

The post குறைதீர்நாளில் மாணவர்களுடன் மனு கொடுக்க வந்த கவுன்சிலரை ‘லெப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய தஞ்சை கலெக்டர் appeared first on Dinakaran.

Related Stories: