தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக நிலை நிறுத்துவது நமது குறிக்கோள்: கேலோ இந்தியா தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கின் விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல் முருகன், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று முதல் வரும் ஜன. 31 வரை நடைபெற உள்ளது.

சென்னையில் நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். எல்லோருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சியில் உழைத்து வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்டதே. தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக நிலை நிறுத்துவது நமது குறிக்கோள். ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது தமிழ்நாட்டின் இலக்கோ, அதேபோல, விளையாட்டில் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதும் இலக்கு. மணிப்பூர் பிரச்னையால் அங்குள்ள விளையாட்டு வீரர்களை சகோதர உணர்வோடு அழைத்து பயிற்சி கொடுத்தோம். அவர்களில் சிலர் இந்த கேலோ இந்தியா தொடரில் பங்கேற்கின்றனர் என்பது மகிழ்ச்சி. விளையாட்டு கட்டமைப்புகளை உலகத் தரத்துக்கு உயர்த்தி வருகிறோம் எனவும் பேசியுள்ளார்.

The post தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக நிலை நிறுத்துவது நமது குறிக்கோள்: கேலோ இந்தியா தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: