வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதிகபட்சமாக சென்னையில் 70மிமீ மழை பெய்துள்ளது. வானகரம், அண்ணாநகர், அம்பத்தூர் 60மிமீ, சென்னை நுங்கம்பாக்கம், புழல் 50மிமீ, சென்னை டிஜிபி அலுவலகம், திருவாலங்காடு, அயனாவரம், ஐஸ்ஹவுஸ், கொளத்தூர், ஆவடி, அடையார், பூந்தமல்லி, நந்தனம் 40மிமீ, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, மதுரவாயல், மணலி, அண்ணா பல்கலைக் கழகம், திருவிக நகர், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், செங்குன்றம், தண்டையார்பேட்டை 30மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், பாளையங்கோட்டையில் 106 டிகிரி வெயில் நேற்று கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக சென்னை, சேலம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை செப்டம்பர் 1ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: