தமிழகத்தின் தரமான மருத்துவ கட்டமைப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: தமிழகத்தின் தரமான மருத்துவ கட்டமைப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நமக்கு நாமே மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாகவே நடந்துள்ளது. தற்போது சென்னையில் குடிசை பகுதிகளை மையமாக வைத்து மருத்துவ முகாம்கள் நகருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவமனை ஆகியவை மிகவும் பழமை வாய்ந்தவை. இந்த கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற மத்திய அமைப்பு அங்கு ஒரு சில சி.சி.டி.வி. கேமிராக்கள் செயல்படாததை காரணம் காட்டி கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறது. இது 30 நிமிடத்தில் சரி செய்யக் கூடிய விஷயம். இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா? நேற்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தவறான தகவலை வெளியிட்டார்கள்.

தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள். இவ்வாறு மாநில அரசுகளுக்கு எதிராக மாநில அரசின் உரிமைக்கு எதிராக செயல்படுவது அவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படுத்தும். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அப்போது எல்லா விஷயங்களையும் எடுத்துரைப்போம். இந்த மாதிரி தமிழகத்தின் தரமான மருத்துவ கட்டமைப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தின் தரமான மருத்துவ கட்டமைப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: