தமிழகம் – கேரளா எல்லை பகுதியான தென்மலை வனப்பிரிவுக்குட்பட்ட நாகமலை பகுதியை சேர்ந்தவர் சாலமன் (55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு தனது எஸ்டேட்டில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பசு மாட்டினை தேடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பொந்தகாட்டில் பகுதியில் புதர் மறைவில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று சாலமனை திடீரென காலில் கடித்தது. இதனை அடுத்து அவர் கதறியபடி கடித்த சிறுத்தையை கைகளால் தள்ளினார். அப்போது அவரது கையையும் கடித்துக் குதறியது. பின்னர் அதனை வேகமாக மிதித்து தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து சாலமன் தப்பி ஓடினார்.
பின்னர் அருகில் இருந்த எஸ்டேட் பணியாளர்களிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரை புனலூர் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 250 மீட்டர் தொலைவில் பிரதான சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் சிறுத்தையை இப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்று வனத்துறையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து வனத்துறை தெற்கு வட்ட சிசிஎப் கமலாஹர், தென்மலை கோட்ட வன அலுவலர் ஷானவாஸ், சரக அலுவலர் செல்வராஜ் மற்றும் வனத்துறையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் 2 வயது உடைய பெண் குட்டி சிறுத்தை ஒன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. இறந்த சிறுத்தையின் முதுகில் ஆழமான காயம் ஒன்று இருந்தது. இதுதான் சாலமனை தாக்கியதா? என்பது உறுதியாக தெரியவில்லை. வேட்டையின் போது சிறுத்தையின் முதுகில் கொம்பு உடைய விலங்குகள் ஏதேனும் தாக்கி இருக்கலாம் என்று வனத்துறையினரால் கூறப்படுகிறது.
இறப்பு காரணத்தை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்தாலும் மனிதரை தாக்குவது தற்போது தான் முதல் முதலாக நடந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் வனவிலங்குகளான யானை, புலி, மிளா, ஓநாய் நடமாட்டத்தால் இப்பகுதியில் ரப்பர் பால் எடுக்கும் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
The post தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்: தேடுதல் வேட்டையில் குட்டி சிறுத்தை சடலம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.