தமிழ்நாடு சட்டப்பேரவை ஜனவரி 2வது வாரம் கூடுகிறது: 3 நாட்கள் நடத்த திட்டம் என தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரை ஜனவரி 2வது வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2024ம் ஆண்டிற்கான கூட்டத்தொடரை ஜனவரி 2வது வாரத்தில் 3 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், ஜன.7 மற்றும் 8ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் தொடரும் நிலையில் அதிகாரப்பூர்வ கூட்டத்தொடருக்கான தேதி விரைவில் வெளியாகும் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், ஆண்டின் முதல் கூட்டதொடர் ஆளுநரின் உரையுடன் தொடங்கப்பட வேண்டும் என்பது மரபு. ஆனால், இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்த உரையை வாசிக்காமல், அவருடைய சொந்த கருத்துகளை சில வாசகங்களில் சேர்த்து படித்தார்.

இதனால், ஆளுநரின் இந்த நடவடிக்கையை பேரவையிலேயே முதல்வர் குற்றம்சாட்ட தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிவிட்டார். இதுமட்டுமின்றி பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம்தாழ்த்துவது உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை தொடர்ந்து அரசிற்கு ஆளுநர் கொடுத்து வந்ததால் அரசிற்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிமாகியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கப்படுமா? என்பது கேள்விகுறியாக உள்ளது.

The post தமிழ்நாடு சட்டப்பேரவை ஜனவரி 2வது வாரம் கூடுகிறது: 3 நாட்கள் நடத்த திட்டம் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: