தமிழ் புத்தாண்டு எதிரொலி: தோவாளை, நிலக்கோட்டை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு.. மல்லிகை கிலோ ரூ.1250-க்கு விற்பனை..!!

குமரி: குமரி மாவட்டம் தோவாளை, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலர் சந்தைகளில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தை ஆகும். ஓசூர், ராயப்பேட்டை, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மற்றும் பெங்களூரில் இருந்து ஏராளமான பூக்கள் தோவாளை பூ சந்தைக்கு தினசரி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏராளமாக ஏற்றுமதி ஆவதால் இந்த பூச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற பூ சந்தையாக அமைந்துள்ளது.

பண்டிகை காலங்கள், விசேஷ காலங்களில் பூக்களின் விலை பல மடங்கு உயரும். அந்த வகையில் நாளை சித்திரை மாதம் முதல் நாளை முன்னிட்டு குமரி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.350-க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று கிலோ ரூ.1250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிச்சி பூ ரூ.550-ல் இருந்து ரூ.1750-ஆக விலை அதிகரித்துள்ளது. அரளி பூ விலை ரூ.100-ல் இருந்து ரூ.200-ஆக உயர்ந்திருக்கிறது.

இதேபோல், நிலக்கோட்டை மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1,200க்கும், முல்லை கிலோ ரூ.700க்கும், ஜாதி பூ கிலோ ரூ.700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிலக்கோட்டை மலர் சந்தையில் சம்பங்கி கிலோ ரூ.300, கனகாம்பரம் ரூ.700, ரோஜா ரூ.200, செண்டு மல்லி ரூ.150க்கும் விற்பனையாகிறது. கோழிக்கொண்டை ரூ.100, மருகு ரூ.120, மரிக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ் புத்தாண்டு எதிரொலி: தோவாளை, நிலக்கோட்டை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு.. மல்லிகை கிலோ ரூ.1250-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: