தமிழ்நாட்டின் மிக நீளமான 7.5 கிமீ பறக்கும் பாலம் பிரதமர் மோடி திறந்தார்: மதுரை –திருச்சிக்கு 23 கிமீ பயண தூரம் குறையும்

மதுரை: மதுரை அவுட் போஸ்ட் முதல் ஊமச்சிகுளம் மந்திகுளம் வரை 7.5 கி.மீ தூரத்திற்கு ரூ.612 கோடியில் தமிழ்நாட்டின் மிக நீளமான பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலியில் நேற்று திறந்து வைத்தார். மதுரையில் மாநகராட்சி அருகில், பாலம் திறப்பு நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மிகப்பெரிய எல்இடிக்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிரதமர் பாலத்தை திறந்து வைத்ததும், முறைப்படி பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. பாலத்தில் செல்லும் வாகனங்களை வரவேற்கும் வகையில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் பூக்கள் தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் அனைவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த பறக்கும் பாலம் பணி 2018, செப்டம்பரில் தொடங்கியது. 150 அடிக்கு ஒரு ராட்சத தூண் என 268 ஒற்றை தூண்களில், கான்கிரீட் கர்டர் அமைத்து இணைக்கப்பட்டுள்ளது. இதன்மீது பாலத்தின் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ்பகுதியில் இரவை பகலாக்கும் வகையில் ஒவ்வொரு தூணுக்கு இடையிலும் எல்இடி விளக்குகளும், தூணை சுற்றி 4 திசைகளிலும் சிறிய விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. 7.5 கிமீ தூரமுள்ள பாலம் ஊமச்சிகுளத்தில் நிறைவடைந்து இறங்கியதும், புதிய நான்குவழிச்சாலை வழியாக சென்று, நத்தம் கொட்டாம்பட்டி சாலையை அடையும். அங்கிருந்து கொட்டாம்பட்டி வழியாக துவரங்குறிஞ்சி அருகே திருச்சி நான்குவழிச்சாலையில் போய்ச்சேரும். எனவே, இந்த பறக்கும் பாலம் வழியாக செல்லும்போது திருச்சிக்கு 23 கி.மீ பயண தூரமும், பெருமளவு நேரமும் குறையும். நேற்று இந்த புதிய பாலத்தில் பயணித்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

The post தமிழ்நாட்டின் மிக நீளமான 7.5 கிமீ பறக்கும் பாலம் பிரதமர் மோடி திறந்தார்: மதுரை – திருச்சிக்கு 23 கிமீ பயண தூரம் குறையும் appeared first on Dinakaran.

Related Stories: