- பெரியார் பல்கலைக்கழகம்
- சேலம்
- தங்கவேல்
- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்...
- தின மலர்
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக அரசால் சஸ்பெண்ட் செய்ய அறிவுறுத்தப்பட்ட பதிவாளர் தங்கவேல், 12 நாள் தொடர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். விதி மீறி அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொ) தங்கவேல் உள்ளிட்ட சிலர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது. இப்புகார்கள் குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை அளிக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இதன்பேரில் பழனிசாமி ஐஏஎஸ் தலைமையிலான இரு நபர் கமிட்டி, விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை, கடந்த 5ம் தேதி அரசிடம் அளிக்கப்பட்டது.
அதில், துணைவேந்தர் ஜெகநாதன் மீது 6 குற்றச்சாட்டுகளும், பதிவாளர் தங்கவேல் மீது 8 குற்றச்சாட்டுகளும், தமிழ்த்துறைத்தலைவர் பெரியசாமி மீது 5 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடப்பு மாதத்தோடு (பிப்ரவரி) பணி ஓய்வு பெறவுள்ள கணினி அறிவியல் துறைத்தலைவரான பதிவாளர் (பொ) தங்கவேல் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை முதன்மைச்செயலர் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் துணைவேந்தர், அரசின் ஆணையை செயல்படுத்தாமல் உள்ளார். இந்நிலையில் பதிவாளர் (பொ) தங்கவேல், திடீரென நேற்று முன்தினம் (12ம் தேதி) முதல் வரும் 23ம் தேதி வரை 12 நாட்களுக்கு தொடர் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
முதுகுவலி காரணமாக மருத்துவ விடுப்பு வழங்கும்படியும், அதற்கான மருத்துவச்சான்றை மீண்டும் பணியில் சேரும்போது வழங்குவதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளார். துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேலுக்கு மருத்துவ விடுப்பை அளித்துள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடக்கும் நிலையில், பதிவாளர் பொறுப்பில் இருந்த தங்கவேல் மருத்துவவிடுப்பில் சென்றுள்ளார். அவரை உடனடியாக அரசு அறிவுறுத்தியபடி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பேராசிரியர்கள், பணியாளர்கள் சங்கத்தினரும், மாணவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
இச்சூழலில் ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இவ்விவகாரம் எழுப்பப்படலாம் என்பதாலும், இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறும்போது எவ்வித பிரச்னையும் இன்றி சென்றுவிடலாம் எனக்கருதியும் விடுமுறையில் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே பதிவாளர் (பொ) தங்கவேலுக்கு மருத்துவ விடுப்பு அளித்ததில் விதிமீறல் உள்ளது என பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பதிவாளர் தங்கவேல் நேற்று முன்தினம் தனது 60வது வயதை பூர்த்தி செய்துள்ளார். நேற்று அவருக்கு 61வது வயது ஆரம்பித்துள்ளது.
60 வயது முடியும்போது, பணியில் இருக்கும் பேராசிரியர்கள் அல்லது முக்கிய பொறுப்பு அதிகாரிகளுக்கு அம்மாத இறுதியில் ஓய்வு பெற தற்காலிக பணி நீட்டிப்பு வழங்கப்படும். இந்த தற்காலிக பணி நீட்டிப்பு காலத்தில் சிறப்பு சலுகைகள், பலன்கள் வழங்கப்படாது. அதாவது மருத்துவ விடுப்பு என்பது கிடையாது. ஆனால், நேற்று முன்தினம் 60 வயதை நிறைவு செய்த தங்கவேலுக்கு தற்போது விதிமுறைகளை மீறி தற்காலிக பணி நீட்டிப்பு காலத்தில் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
* சிண்டிகேட் உறுப்பினர் தேர்தல்
கடும் எதிர்ப்புக்கு இடையே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பிரதிநிதித்துவ சிண்டிகேட் உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. அரூர் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் குமரன், தர்மபுரி தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் சிவகுமார், நாமக்கல் குமாரபாளையம் அரசு உதவிபெரும் கல்லூரி உதவி பேராசிரியர் உமா ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். தேர்தலும், செனட் பேரவை கூட்டமும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு, செனட் பேரவை உறுப்பினர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து காலை 11 மணிக்கு நடைபெற வேண்டிய தேர்தல் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 89 வாக்குகளில் 70 வாக்குகள் பதிவாகின. நேற்று மாலை முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தனியார் கல்லூரிகள் சார்பில் போட்டியிட்ட சிவகுமார் 62 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
The post அரசால் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் மருத்துவ விடுப்பில் சென்றார் பெரியார் பல்கலை. பதிவாளர்: விதிகளை மீறி துணைவேந்தர் அனுமதி வழங்கியதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.