சுசீந்திரம் தாணுமாலய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: விமரிசையாக நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்பு

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 8.20 மணிக்கு நடந்தது. முதல் தேரில் விநாயகர், 2ம் தேரில் சுவாமி, அம்பாள் மற்றும் 3ம் தேரில் அம்பாளும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை நடத்தி, தேங்காய் உடைத்து தேரோட்டம் தொடங்கியது. நாகர்கோவில் மேயர் மகேஷ், தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை தேர் அடைந்தது.

மாலை 6 மணிக்கு சுவாமி மண்டக படிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை அமர செய்து 3 முறை தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆறாட்டு நடக்கிறது. விழாவையொட்டி தெப்பக்குளத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஜொலிக்கும் மின்விளக்குகளின் ஒளி தெப்பக்குளத்தில் பிரதிபலிக்கும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது.

The post சுசீந்திரம் தாணுமாலய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: விமரிசையாக நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: